மட்டக்களப்பில் வயல் நிலங்களை ஆக்கிரமித்து வரும் வௌ்ளம்!

மட்டக்களப்பில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சனிக்கிழமை முதல் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக மாவட்டதிலுள்ள குளங்கள் அனைத்தும் நீர் நிரம்பிய நிலையில் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக உன்னிச்சை குளத்தின் வான் கதவுகள் 6 அடிக்கு மூன்று கதவுகள் திறக்கப்பட்டதையடுத்து அந்த பகுதியிலுள்ள விவசாய நிலங்கள் யாவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் தாழ் நில பகுதிகளிலுள்ள குடியிருப்புக்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தொடர் மழையினால் மாவட்டதிலுள்ள  நவகிரிகளம், புனானை அனைக்கட்டு, வடமுனைகுளம், வெலியாகண்டிய குளம், றூகம்குளம். வாகனேரிகுளம், கட்டுமுறிவுக்குளம், போன்ற குளங்களில் நீர் மட்டம் அதிகரித்ததையடுத்து அந்தந்த குளங்களின் தேவைக்கு ஏற்றவாறு வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன.

மேலும், உன்னிச்சைக் குளத்தின் நீர் மட்டம் 34 அடிக்கு உயர்ந்ததையடுத்து குளத்தின் 3 வான் கதவுகள் தலா 6 அடி உயரத்துக்கு திறக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து மழை பெய்யுமானால் குளத்தின் வான்கதவுகளை மேலும் திறக்க வேண்டிய நிலை ஏற்படும் என நீர்பாசன திணைக்கள பொறியிலாளர் தெரிவித்தார்

இதேவேளை, உன்னிச்சைக் குளத்தின் வான் கதவு திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வேளாண்மைகள் யாவும் பாதிப்படைந்துள்ளதுடன் தாழ் நிலப்பகுதிகள் இன்று இரவு வெள்ளத்தில் மூழ்கும் அபாய நிலை தோன்றியுள்ளதுடன் வான்கதவு திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றை அண்டிய மற்றும் தாழ்நிலபகுதிகளிலுள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குளங்கள், நீர் நிலைகள், கடல், ஆறுகளில் நீராடுவதை தவிர்க்குமாறும் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் அவதானமான செயற்படுமாறு மாவட்ட இடர் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *