ஜனாதிபதித் தேர்தலை தடுக்கும் வகையில் உயர்நீதிமன்றில் மற்றுமொரு அடிப்படை உரிமை மனு

19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் உரிய வகையில் நிறைவேற்றப்படாததால் அதனை பொதுமக்கள் கருத்து கணிப்புக்குட்படுத்தி நிறைவேற்றும் வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பு வழங்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி அருண லக்சிறி உனவட்டுன இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

மனுவின் பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம், சட்ட மாஅதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

19 ஆவது திருத்தத்தின் ஊடாக அரசியலமைப்பின் 70 ஆவது சரத்து திருத்தப்பட்டு தெரிவுசெய்யப்படும் பாராளுமன்றத்தை ஒரு வருடத்தின் பின்னர் கலைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதி இழந்துள்ளதாக மனுதாரர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

19 ஆவது திருத்தம் பொதுமக்கள் கருத்து கணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் தீர்ப்பு வழங்கிய போதிலும் இதுவரை  மக்கள் கருத்துக்கணிப்பின் மூலம் அது அங்கீகரிக்கப்படவில்லை என மனுதாரர் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு உட்பட்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகிவருவதுடன் 19 ஆவது திருத்தத்தை மக்கள் கருத்துக்கணிப்பின் மூலம் நிறைவேற்றாமல் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது சட்டத்திற்கு முரணான செயலாகும் எனவும் மனுதாரர் அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு, நாட்டின் அரசியலமைப்பை மீறி 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை மக்கள் கருத்துக்கணிப்பின் மூலம் அங்கீகரிக்காமல் ஜனாதிபதியின் பதவிக் காலத்தை 5 ஆண்டுகளாகக் கருதி ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதன் ஊடாக பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை மக்கள் கருத்துக்கணிப்புக்கு உட்படுத்தும்படி பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு உத்தரவிடுமாறும் மனுதாரர் தமது மனுவினூடாக கோரிக்கை விடுத்துள்ளார்.

Reported by ;S.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *