பாகிஸ்தானில் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (08) காலை 8 மணிக்கு ஆரம்பமானதுடன், மாலை 5 மணி வரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் விதிகளுக்கு அமைய சில பகுதிகளில் மாத்திரம் வாக்குப்பதிவு சில மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
தேர்தலில் மத்திய சட்டமன்றத்திற்கு 5,121 வேட்பாளர்களும், மாகாணங்களுக்கு 12,695 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
பாகிஸ்தானின் மிகப் பெரிய எதிர்க்கட்சி மற்றும் அதன் தலைவரான முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான அடக்குமுறை, தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறாது என்ற கவலையைத் தூண்டியுள்ளது.
நேற்றைய தினம் (07) பலுசிஸ்தான் மாகாணத்தில் சுயாதீன வேட்பாளரின் அலுவலகம் அமைந்துள்ள பகுதி அடங்கலாக இரண்டு இடங்களில் குண்டுவெடிப்புகள் பதிவாகியிருந்தன.
இந்த குண்டுவெடிப்புகளின் போது 24 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர்.
இந்நிலையில், இன்று நடைபெறும் பொதுத்தேர்தலில் அங்கு 12,85,85,760 பேர் வாக்களிக்கவுள்ளதாக பாகிஸ்தான் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
65,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில், அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தபால் மூலம் தனது வாக்கை செலுத்தியுள்ளார்.
இந்த தேர்தலில் பல்வேறு வழக்குகளில் சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
சட்டம் – ஒழுங்கு பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் முழுவதும் இன்று மொபைல் இணைய சேவை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
Reported by:S.kumara