இஸ்ரேல் இராணுவத்திற்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையில் போர் மூண்டு கடந்த சனிக்கிழமையுடன் (13) 100 நாட்கள் கடந்து விட்டன.
இந்த போரில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தைக் கடந்துவிட்டதாக காஸாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 100 நாட்கள் கடந்தும் ஹமாஸ் படையினரால் பணயக்கைதிகளாக கொண்டு செல்லப்பட்டவர்களில் பலரது நிலை குறித்து இதுவரை தகவல் கிடைக்காததால், அவர்களின் உறவினர்கள் அதிருப்தி வௌியிட்டுள்ளனர்.
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி சரமாரியாக ஏவுகணைத் தாக்குதல் நடத்தி, தரை, கடல் மற்றும் வான் வழியாக இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் படையினர், சுமார் 1200 பேரை படுகொலை செய்தனர். மேலும், 250 பேரை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இதனால், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்து விடுவதாக சூளுரைத்த இஸ்ரேல், காஸா பகுதியை முற்றுகையிட்டு அங்கு வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது.
காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை தற்போது 24,000 ஐ கடந்துவிட்டது.
இஸ்ரேலின் குண்டுவீச்சில் இதுவரை 60,582 போ் காயமடைந்துள்ளதாக காஸாவின் சுகாதார அமைச்சு தகவல் வௌியிட்டுள்ளது.
Reported by:S.Kumara