பொருளாதார வளர்ச்சிக்கு மத நல்லிணக்கம் அவசியம்: யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு

பொருளாதார வளர்ச்சிக்கு மத நல்லிணக்கம் மிகவும் முக்கியமானதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

வடக்கில் யுத்தத்தினால் இழந்த வருமானத்தை மீள வழங்குவதற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை துரிதப்படுத்த எதிர்பார்ப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, மதத் தலைவர்கள் ஆற்றக்கூடிய பணிகள் பாரியதெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (06) காலை யாழ். மாவட்ட சர்வ மதத் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

இதன்போது, வட மாகாண பாதுகாப்பு பிரிவினரின் கீழ் உள்ள பகுதிகளில் காணப்படும் கோவில்கள் மற்றும் தேவாலயங்களை மீளமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அனைத்து மத தலைவர்களும் நல்லூர் ஆலய பொறுப்பாளர்களும் விரும்பினால் நல்லூர் ஆலயத்தை விட பெரிய ஆலயத்தை அமைக்க முடியும் எனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

கிறிஸ்தவ தேவாலயங்களில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பாக மடு தேவாலயத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

யுத்த காலத்தில் வௌியேறிய முஸ்லிம் மக்கள் மீள்குடியேறத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இனம் மற்றும் மதம் என்ற அடிப்படையில் பிளவுபட வேண்டிய அவசியமில்லை என வலியுறுத்திய ஜனாதிபதி, அனைத்து மக்களினதும் உரிமைகளை பெற்றுக்கொண்டு, ஒரு நாடாக முன்னோக்கிச் செல்ல வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

அனைத்து மதம் தொடர்பிலும் செயற்பட புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் ஆலோசனைக் குழுக்களை நியமிப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். 

அநுராதபுரம் மற்றும் கண்டியை மையப்படுத்தி பௌத்த சமய கலாசாரத்தை மேம்படுத்தும் வகையிலும், யாழ்ப்பாணம் மற்றும் தெற்கு கைலாயத்தை மையப்படுத்தி இந்து சமய கலாசாரத்தை மேம்படுத்தும் வகையிலும் ஊக்குவிப்பு திட்டங்களை உருவாக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிக்கைகளை கோரியுள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி, நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு இந்த செயற்பாடுகள் பெரும் உறுதுணையாக அமையுமெனவும் கூறியுள்ளார்.

இதனிடையே, யாழ்ப்பாண சர்வமதக் குழு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது பரிந்துரைகளைக் கையளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வடக்கிற்கு தொடர்ச்சியாக விஜயம் மேற்கொண்டு மக்களின் தேவைகளைக் கண்டறிய ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மதத் தலைவர்களினால் இதன்போது நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டின் மத நல்லிணக்கத்தைப் பாதுகாத்து புதிய வேலைத்திட்டத்தின் ஊடாக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு மதத் தலைவர்கள் தமது ஆசிகளை வழங்கியுள்ளனர்.

R.A. ரலீம் மௌலவி உள்ளிட்ட சர்வ மதத் தலைவர்கள், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, யாழ். மாவட்ட செயலாளர் S. சிவபாலசுந்தரன், ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Reported by:S.Kumara

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *