முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு லட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற தென்னிலங்கையைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தவர்களை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் உள்ள சிற்றூழியர் பதவி வெற்றிடங்களுக்கு நியமிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அறியவருகிறது.
பலநோக்கு அபிவிருத்திச் செயலணித் திணைக்களப் பணிப்பாளரின் பணிப்புரைக்கு அமைய இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் வெற்றிடங்களுக்குப் பல்பணி மேம்பாட்டு உதவியாளர்களை வழங்குதல் என்ற தலைப்பின் கீழ் பல்கலைக் கழகங்களில் உள்ள பதவி வெற்றிடங்களுக்காக நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
நாடளாவிய ரீதியில் ஒரு லட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற ஆயிரத்து 139 பேர் நியமனத்துக்குத் தகுதி பெற்றவர்கள் எனப் பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த 7 பேர் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் உள்ள வெற்றிடங்களுக்கு நியமிக்கப்படவுள்ளனர்.
எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் இவர்களுக்கான நேர்காணல் மற்றும் ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் நடாத்தி முடிக்குமாறு பலநோக்கு அபிவிருத்திச் செயலணித் திணைக்களப் பணிப்பாளரால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இருந்தும் ஒரு லட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற பலர் தொழில் வாய்ப்புக்காக விண்ணப்பத்திருக்கும் நிலையில், யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் உள்ள பதவி வெற்றிடங்களுக்கு பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், பல்வேறு சந்தேகங்களையும் உருவாக்கியுள்ளது.
Reported by:S.Kumar