நீதித்துறைக்கு அதி உச்சமான ஒரு அச்சுறுத்தல்

இலங்கையின் சரித்திரத்தில் நீதித்துறைக்கு அதி உச்சமான ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது, இது குறித்து கவனம் எடுக்க வேண்டிய நிலையில் நாங்கள் இருக்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் சபாநாயகர் கருஜயசூரியவின் மொழிகள் மற்றும் சமூக அபிவிருத்தி பயிற்சி மத்திய நிலையத்தில் சிங்கள மொழி கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு மானிப்பாய் சுதுமலை பகுதியில் உள்ள தனியார் விடுதியொன்றில் இன்று (29) காலை சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்றைய பாராளுமன்றத்தினுடைய நிறுவனமயப்படுத்தப்பட்ட பல விடயங்களிலே பாராளுமன்றம் மட்டுமல்ல நீதித்துறை விசேடமாக ஒரு சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது அதைக்குறித்து கவனம் எடுக்க வேண்டிய நிலையில் நாங்கள் இருக்கின்றோம்.

முதல் முறையாக எங்களுடைய நாட்டின் சரித்திரத்தில் நீதிபதி ஒருவர் தன்னுடைய உயிர் பாதுகாப்புக்காக அதுவும் தான் செய்த ஒரு தீர்ப்பின் அடிப்படையிலே வந்திருக்கின்ற அச்சுறுத்தலின் காரணமாக நாட்டை விட்டு ஓடியதாக இன்றைய பத்திரிகைகள் சொல்லுகின்றன, இது நீதித்துறைக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற அதி உச்சமான ஒரு அச்சுறுத்தல்.

நாட்டிலே இருக்கின்ற சுயாதீனமான நிறுவனங்களை பாதுகாக்க வேண்டிய பாரிய கடைப்பாடு எங்கள் அனைவருக்கும் இருக்கின்றது.அத்தகைய சுயாதீனமான நிறுவனங்களிலே பிரதானமானது நீதி துறையாக இருக்கின்றது, நீதித்துறையை பாதுகாக்கின்ற போது நீதிபதிகளுக்கு அச்சுறுத்தல் செய்வதை நாங்கள் கண்டிக்க வேண்டும் தடுக்க வேண்டும் அதே வேளையிலே நீதித்துறைக்கு உள்ளேயே தவறுகள் இருந்தால் அதனை திருத்துகின்ற வகையிலே நாங்கள் செயல்பட வேண்டும்.

நீதித்துறைக்கு அச்சுறுத்தல் ஏற்ப்படுகின்ற போது மூன்று விதமாக அவர்கள் செயல்படலாம் ஒன்று அந்த அச்சுறுத்தலை கணக்கில் எடுக்காமல் தாங்கள் செய்ய வேண்டியதை செய்வது, இரண்டாவது அப்படியான அச்சுறுத்தல் வந்தால் அவர்கள் இராஜினாமா செய்து அதிலிருந்து விலகி ஓடுவது, மூன்றாவது நிலைப்பாடு நீதிபதிகள் அந்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகி அதற்கு அடங்கி தங்களுடைய நடத்தையை அல்லது தீர்ப்பை மாற்றி மற்றவர்களுடைய கைப்பொம்மையாக இயங்குவது. அதுவும் தடுக்கப்பட வேண்டும்.

நீதித்துறையை பாதுகாப்பது என்றால் நீதிபதிகள் என்ன செய்தாலும் அவர்களை பாதுகாப்பதல்ல நீதிபதிகள் சுயாதீனமாக செயல்படுவதை நாங்கள் பாதுகாப்பது,

இன்றைக்கு காலையில் வந்திருக்கின்ற இந்த செய்தியின் காரணமாக இந்த முக்கியமான எச்சரிப்பை இந்த வேளையில் கொடுக்க வேண்டும் என நினைக்கின்றேன்.

அரசியலை அரசியல்வாதிகளிடம் விட்டுவிடுங்கள் நாங்கள் மற்ற வேலைகளை பார்ப்போம் என்று ஒன்று சொல்லப்பட்டிருக்கின்றது, அரசியல் என்பது அரசியல்வாதிகளின் கைகளில் விட்டு விடுவதற்கான இலகுவான விடையம் அல்ல, அது அதி முக்கியமான ஒரு விடயம்.அரசியல் என்பது மக்களுடைய ஆணையை, மக்களுடைய விருப்பத்தை தங்களுடைய பிரதிநிதிகள் மூலமாக செயற்படுத்துகின்ற ஒன்று, அது மக்களுக்காக இயங்குகின்ற ஒன்றாக இருக்க வேண்டும் மக்கள் அதில் தொடர்ந்து ஈடுபடுகின்றவர்களாக இருந்தே ஆக வேண்டும்.

நீங்கள் சிங்களம் பகிலுவதும், சிங்கள மாணவர்கள் தமிழ் பகில்வதும் இதிலே நீங்கள் எவ்வளவு தூரம் முன்னேற்றம் அடைந்து இருப்பதும் ஒரு அரசியல் விடயம், அரசியலிலே ஒரு முற்போக்கான தாக்கத்தை ஏற்படுத்துகின்ற விடயமாக இருக்கின்றது, அந்த வகையிலே இதுவும் அரசியல் தான், நீங்கள் ஈடுபட்டிருப்பதும் அரசியல் தான் தொடர்ந்து அரசியலில் ஈடுபடுங்கள் உங்களுடைய பிரதிநிதிகளை நீங்கள் என்ன செய்ய விரும்புகின்றீர்களோ அதை செய்ய வையுங்கள் என தெரிவித்துள்ளார்.

Reported by:S.Kumara

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *