அபிவிருத்தி சவால்களை எதிர்கொள்ள தொழில்நுட்ப துறைகளின் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும்: ஜனாதிபதி வலியுறுத்தல்

உலகெங்கிலும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் எதிர்கொள்ளும் தற்போதைய அபிவிருத்தி சவால்களை எதிர்கொள்வதில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க துறைகளின் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

கியூபாவின் ஹவானா நகரில் இடம்பெறும் “G77 + சீனா” அரச தலைவர்கள் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. 

தொற்றுநோய்கள், காலநிலை மாற்றங்கள், உணவு, உரம் மற்றும் வலுசக்தி நெருக்கடிகள் போன்றவை நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு தடைகளை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது குறிப்பிட்டுள்ளார். 

அதிக செலவு காரணமாக சில தொழில்நுட்ப முறைகளுக்கு பிரவேசிப்பதற்குள்ள வரையறைகள், போதுமான டிஜிட்டல் திறன்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை, கலாசார மற்றும் நிறுவன ரீதியில் நிலவும் தடைகள் மற்றும் நிதி தொடர்பான தடைகள் போன்ற சவாலான சூழ்நிலைகள் உலகில் தொழில்நுட்ப ரீதியிலான பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் தோன்றுவதற்குக் காரணமாக அமைந்துள்ளதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார். 

தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வு காரணமாக உருவாகியுள்ள இடைவெளியை நிரப்புவதற்காக, டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் Big Data, Internet of Things (IoT), செயற்கை நுண்ணறிவு (AI), Blockchain, உயிரியல் தொழில்நுட்பவியல் (Biotechnology) மற்றும் மரபணு வரிசைமுறை (Genome Sequencing) போன்ற புதிய தொழில்நுட்பங்களை நோக்கி விரைவாக செல்ல வேண்டியது அவசியமாகும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். 

தற்போது குறைந்த செயற்திறனுள்ள விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் குறித்து மதிப்பீடுகளை செய்வதற்கும், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க சபையொன்றையும் டிஜிட்டல் மாற்ற முகவர் நிறுவனமொன்றையும் நிறுவுவதற்கு தேவையான நடவடிக்கைகளை இலங்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

மேலும், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான தொழில்நுட்ப ஒத்துழைப்பின் பிரதிபலனாக, புதிய தொழில்நுட்பவியலுக்காகவே விசேடமான நான்கு புதிய பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கும் இலங்கை திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார். 

மேலும், காலநிலை மாற்றம் குறித்த உத்தேச சர்வதேச பல்கலைக்கழகத்தை அதில் ஐந்தாவதாக ஸ்தாபிப்பதற்கும் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், புதிய ஹவானா பிரகடனத்தை ஆதரிப்பதற்காக இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன்போது கூறியுள்ளார். 

“G77 + சீனா” அரச தலைவர்களின் உச்சி மாநாட்டின் கூட்டுக்குரல், சர்வதேச ரீதியில் ஒலிக்கச் செய்ய ஒன்றிணைய வேண்டுமெனவும் ஜனாதிபதி அனைத்து உறுப்பு நாடுகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Reported by :S.Kumara

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *