மீனவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் இந்திய வௌியுறவு துறை அமைச்சர் கடிதம்

தமிழக மீனவர்கள் அண்மையில் தாக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் குப்புசாமி அண்ணாமலைக்கு இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் அனுப்பிவைத்துள்ள பதில் கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 4 இந்திய மீனவர்கள் மீது கடந்த மாதம் 22 ஆம் திகதி இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

ஆர்காட்டுத்துறையில் இருந்து தென்கிழக்கில் 22 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீதான இந்த தாக்குதலின் போது 5 இலட்சம ரூபா பெறுமதியான மீன்பிடி உபகரணங்களும் சேதமடைந்தாக அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக தாம் அனுப்பியிருந்த கடிதத்திற்கு இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் அனுப்பியுள்ள பதில் கடிதத்தை பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் குப்புசாமி அண்ணாமலை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் உடனடியாக இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்ததாக இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன்போது சம்பவம் தொடர்பில் ஆழ்ந்த கவலையையும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துக்கொண்டாக அவர் கூறியுள்ளார்.

மீனவர்களுக்கு எதிராக தாக்குதல்களை மேற்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறும் தகவல்களை வழங்குமாறும் இலங்கை அரசாங்கத்திடம் இந்திய உயர்ஸ்தானிகராலயம் கோரியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாகவும் இந்திய வௌியுறவுத்துறை அமைச்சரின் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Reported by:S.Kumara

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *