யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் இன்றாகும்(18).
14 ஆவது ஆண்டாக இன்று முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பல இடங்களில் உயிர் நீத்தவர்கள் உணர்வுபூர்வமாக நினைவுகூறப்படுகின்றனர்.
இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த மக்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் முன்னெடுக்கப்பட்டது.
இன்று(18) காலை 10:30 அளவில் உயிர் நீத்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு முள்ளிவாய்க்கால் பிரகடன உரை நிகழ்த்தப்பட்டது.
முள்ளிவாய்க்கால் பிரகடன உரையை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொது கட்டமைப்பின் சார்பாக தவத்திரு அகத்தியர் அடிகளார் நிகழ்த்தினார்.
முள்ளிவாய்கால் நினைவேந்தலை முன்னிட்டு முல்லைத்தீவு – மல்லாவி நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள் இன்று(18) மூடப்பட்டிருந்தன.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு கிளிநொச்சி வர்த்தக நிலையங்கள் மற்றும் பொதுச்சந்தை ஆகியன மூடப்பட்டிருந்ததாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டர்.
முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து நினைவேந்தல் மற்றும் விசேட பூசையும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் கிரான் பிரதான சந்தியில் நடைபெற்றது.
முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் நிகழ்வு தோப்பூர் – மருதநகர் பகுதியிலும் முன்னெடுக்கப்பட்டது.