பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார தலைமையில் நேற்று (25) கூடிய அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) நான்கு அம்சங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
19.01.2023ஆம் திகதி நடத்தப்பட்ட கோப் குழுக் கூட்டத்தின் தொடர்ச்சியாக இக்கூட்டம் நடைபெற்றிருந்ததுடன், இதில் பின்வரும் விடயங்கள் குறித்து குழு கவனம் செலுத்தியது,
1. சந்தையில் முட்டைக்கு நியாயமான விலையை வழங்கும் நோக்கில் உற்பத்திச் செலவை மதிப்பீடு செய்யப் பரிந்துரை
கடந்த கோப் குழுவில் வழங்கப்பட்ட பரிந்துரைக்கு அமைய வர்த்தக மற்றும் கமத்தொழில் அமைச்சின் செயலாளர்கள், முட்டை தொடர்பான செலவீனங்களை கணக்கில் கொண்டு முட்டைக்கான விலையைத் தீர்மானிக்கும் விலைச் சூத்திரத்தை இங்கு முன்வைத்தனர்.
முன்வைக்கப்பட்ட விலைச்சூத்திரம் மற்றும் அது தொடர்பான ஆழமான விடயங்கள் குறித்துக் கலந்துரையாடியதைத் தொடர்ந்து, விலைச்சூத்திரத்தை பயன்படுத்துவதில் காணப்படும் நடைமுறை ரீதியான அக்கறைகள் இருப்பதால் விலைச் சூத்திரத்தை மீளாய்வு செய்யுமாறு கோப் குழுவின் தலைவர் (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார பணிப்புரை வழங்கினார்.
குழுவில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டு விலைச் சூத்திரத்தை மீளாய்வு செய்வதாக இங்கு வருகை தந்திருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
2. உள்நாட்டு கோழிப் பண்ணைத்துறையின் பாதுகாப்பது தொடர்பில் விரிவான கலந்துரையாடல்
உள்நாட்டு கோழிப் பண்ணைத்துறை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை கோப் குழு வலியுறுத்தியதுடன், அதிகாரிகளும் இதனை ஏற்றுக் கொண்டனர்.
கோழிப் பண்ணைத்துறை ஸ்திரம் அடையும் வரை ஒன்றரை மாத காலங்களுக்கு முட்டையொன்றின் விலை 51 ரூபாவாகப் பேணப்படுமாயின் அதன் பின்னர் முட்டை விலையைக் குறைக்க முடியும் என கோழிப் பண்ணைகளின் பிரதிநிதிகள் குழுவுக்குத் தெரியப்படுத்தியிருப்பதாக கோப் குழு சுட்டிக்காட்டியது.
கோழிப் பண்ணைத்துறையைப் பாதுகாக்கும் அதேநேரம், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாவனையாளர்கள் மற்றும் ஏனைய சகல தரப்பினரின் பக்கத்திலிருந்து இவ்விடயத்தை நோக்கி, அதற்கமைய செயற்பட வேண்டும் எனக் குழு வலியுறுத்தியது.
நாளொன்றுக்கு ஏறத்தாழ 3 மில்லியன் முட்டைக்கான தற்காலிக தட்டுப்பாடு காணப்படுவதாக கோப் குழுவில் வெளிப்படுத்தப்பட்டது. இதற்குத் தீர்வாகக் கோழிப் பண்ணைத் துறையில் துரித நடவடிக்கைகள் எதுவும் இல்லையென இங்கு வருகை தந்திருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனவே, வாடிக்கையாளர்களைக் கருத்தில் கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட அளவு முட்டையை இறக்குமதி செய்ய இணங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
4. நியாயமான விலையில் பாவனையாளர்களுக்கு முட்டையை வழங்குவது குறித்து அவதானம்
கோப் குழு முன்னிலையில் முன்வைக்கப்பட்ட அனைத்து விடயங்களையும் கருத்தில் கொண்டு, பாவனையாளர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்பது கோப் குழுவின் நிலைப்பாடாக அமைந்தது.
எனவே, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்துப் பொது மக்களுக்குத் தெரிவிக்கவும், கவனத்தில் எடுக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு நடைமுறைத் தீர்வைக் காண்பதில் அனைத்துத் தரப்பினரும் இணைந்து செயற்படுகின்றனர் என்பதை உறுதிப்படுத்துமாறும் கோப் குழுவின் தலைவர் (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார பணிப்புரை விடுத்தார்.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான பாட்டலி சம்பிக்க ரணவக, நிமல் லான்சா, ஜகத் குமார சுமித்திராராச்சி, பிரேம்நாத் சி.தொலவத்த, மதுர விதானகே, (பேராசிரியர்) சரித ஹேரத் மற்றும் வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு, கமத்தொழில் அமைச்சு, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை உள்ளிட்டவற்றின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்