நாளாந்த மின்வெட்டு நேரத்தை எந்தச் சந்தர்ப்பத்திலும் அதிகரிக்கப் போவதில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நிலக்கரியைப் பெறுவதில் சிக்கல் நிலவினாலும் நீண்டநேரத்துக்கு மின்வெட்டை அமுல்படுத்த வேண்டியேற்படாது என சபையின் ஊடகப்பேச்சாளர் அன்ரூ நவமணி தெரிவித்தார்.
சிக்கலான சந்தர்ப்பங்களில் மின்சார விநியோகத்தை தடையின்றி முன்னெடுப்பதற்குத் தேவையான மாற்றுத்திட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நுரைச்சோலை அனல் மின்னுற்பத்தி நிலையத்தின் ஒரு மின்னுற்பத்தி தொகுதியின் செயற்பாடுகள் நேற்று(23) நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.
பராமரிப்பு பணிகளுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
நுரைச்சோலை அனல் மின்னுற்பத்தி நிலையத்தில் 3 மின்னுற்பத்தி தொகுதிகள் காணப்படுவதுடன் அவற்றிலிருந்து 900 மெகாவோட் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்படுகின்றது.
இதில் ஒரு மின்னுற்பத்தி தொகுதியின் செயற்பாடுகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளமையால் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்படும் 900 மெகோவோட் மின்சாரத்தில் 300 மெகாவோட் மின்சாரம் இழக்கப்படுகின்றது.
நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாளையும் நாளை மறுதினமும் 26 ஆம் திகதியும் மின்வெட்டு அமுல்படுத்தப்படாதென இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Reported by :Maria.S