முல்லைத்தீவு குருந்தூர்மலை தொடர்பில் தொடர்ந்தும் அத்துமீறல்கள் இடம்பெற்று வருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இன்று பாராளுமன்றத்தில் குற்றம் சுமத்தினார்.
ஏற்கனவே அங்கு நிர்மாணிப்புக்கள் எதனையும் மேற்கொள்ளக்கூடாது என்று நீதிமன்றம் கூறியுள்ளபோதும், அங்கு நீதிமன்றத்தை மீறி செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தநிலையில் பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து தரப்பினரையும் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க உறுதியளித்திருந்தார். அதுவரையில் குருந்தூர்மலையில் எவ்வித செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படாது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் பாராளுமன்ற சபையில் மேற்கொள்ளப்பட்ட இந்த உறுதிமொழியை மீறி இன்று கொழும்பில் இருந்து நிலஅளவை திணைக்கள அதிகாரிகள், குருந்தூர்மலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இது நீதிமன்ற உத்தரவை மாத்திரம் அல்ல. பாராளுமன்ற சபையின் உறுதிமொழியையும் மீறும் செயல் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டார். எனவே இந்த விடயத்தில் பிரதமர் கவனம் செலுத்தி உறுதிமொழிகளை நிறைவேற்றவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இதன்போது கருத்துரைத்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள இந்துக்கோயில்கள் தொடர்பில் எவரும் பிரச்சினைகளை எழுப்புவதில்லை. எனினும் வடக்குகிழக்கில் உள்ள பௌத்த விஹாரைகள் பற்றி, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பிரச்சினைகளை எழுப்பி வருவதாக குற்றம் சுமத்தினார். அதுவும், ஜெனீவா அமர்வு வரும்போதே இவ்வாறான பிரச்சினைகள் முன்வைக்கப்படுவதாக அவர் குற்றம் சுமத்தினார்.
இதற்கு பதிலளித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இது நீதிமன்ற உத்தரவுடன் தொடர்புடையது, இதனை பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், இந்த சபையில் அளிக்கப்பட்ட உறுதிமொழியும் இன்று மீறப்பட்டுள்ளமையை தாம் பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
Reported by :Maria.S