ஹிஜாப் போராட்டம் , ஈரானின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் வெளிநாட்டு சதி – ஈரான் அதிபர் குற்றச்சாட்டு

ஈரானில், மாஷா அமினி என்ற 22 வயது இளம்பெண் ஹிஜாப் எனப்படும் தலையை மறைக்கும் உடையை சரியாக அணியவில்லை கூறி போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம் 16-ந் திகதி விசாரணையின்போது அவர் திடீரென மர்மமான முறையில் இறந்தார். போலீசார் அவரை அடித்து கொன்று விட்டதாக கூறி ஈரானில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்கள் வெடித்தன.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் ஹிஜாப் உடைகளை தீ வைத்து எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள். தொடர் போராட்டத்தால் ஈரானில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. போராட்டக்காரர்கள்- போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் 92 பேர் இறந்துவிட்டதாக ஈரான் மனித உரிமை குழு தெரிவித்து உள்ளது.

இதில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் ஈரான்- ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் 41 பேர் கொல்லப்பட்டு உள்ளதாக அந்த குழு தெரிவித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட 1,500 பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், மேலும் அது தீவிரமடையாமல் தடுக்க ஈரானில் சமூக வலை தளங்கள் முடக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், ஹிஜாப் போராட்டம் ஈரானின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் வெளிநாட்டு சதி என்று அந்நாட்டு அதிபர்  அயதுல்லா அலி கொமேனி தெரிவித்துள்ளார். போராட்டம் தொடங்கியது முதல் மவுனம் காத்து வந்த அவர் தனது கருத்தை முதன்முறையாக தெரிவித்துள்ளார். மாஷா அமினி போலீஸ் காவலில் இறந்ததை அறிந்து தாம் மனம் உடைந்ததாகவும் அவரது மரணம் மிகவும் துயரமானது என்றும் கொமெனி குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவும், இஸ்ரேலும் இந்த போராட்டங்களை திட்டமிட்டு தூண்டி விட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

Reported by :Maria.S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *