சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி தொடர்பாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலம் பிழையானது என்பது இன்று உறுதியானது. இந்த சட்டமூலம் நேற்று (06) விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படவிருந்த நிலையில், எதிர்க்கட்சியினரின் கடும் ஆட்சேபனை காரணமாக அது நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.
நிதி அமைச்சர் என்ற வகையில், பசில் ராஜபக்ஸ 2022 ஆம் ஆண்டு சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்தில் சமூக பாதுகாப்பு பங்களிப்பு நிதி தொடர்பிலான யோசனையை முன்வைத்திருந்தார்.
120 மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட வருடாந்த வருமானம் உள்ள தொழில் முயற்சிகளில் இருந்து 2.5 வீதத்தை அறவிடுவதாக வரவு செலவுத் திட்ட யோசனையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கமைவாக, சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி சட்டமூலம் என்ற பெயரில் புதிய சட்டமூலமொன்று தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதுடன், இதன் ஊடாக இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், சேவை வழங்குநர்கள், மொத்த மற்றும் சில்லறை வர்த்தகர்களிடமிருந்து 2.5 வீத வரி அறவிடப்படவுள்ளது.
ஏற்கனவே அறவிடப்படுகின்ற VAT-க்கு மேலதிகமாக இந்த வரி அறவிடப்படவுள்ளதால், மேலதிக சுமை ஏற்படும் என நேற்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஆகியோர் தமது எதிர்ப்பை தெரிவித்தனர். வீட்டு மனை வர்த்தகம் இந்த வரிக்குள் உள்ளடக்கப்படாமை தொடர்பிலும் கேள்வி எழுப்பப்பட்டது.
வீட்டு மனை வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி வர்த்தகம் என்பன இந்த வரியில் இருந்து விலக்கப்பட்டமை தவறுதலாக இடம்பெற்றுள்ளதாக தமக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் இது புதுமையான விடயம் எனவும் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டார். எவ்வாறாயினும், பிழையான சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவது பாரதூரமான விடயம் என அனுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.
Reported by :Maria.S