இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார வீழ்ச்சியைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி சிறிலங்கா ஜனாதிபதியின் அதிகாரபூர்வ இல்லத்தை மக்கள் முற்றுகையிட்டதோடு, இல்லத்தை கைப்பற்றியுமிருந்தனர் அதனையடுத்து ஜூலை மாதம் 11 ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறிய கோட்டாபய ராஜபக்ச மாலைதீவுக்குத் தப்பிச் சென்றார்.
பின்னர் அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார். அங்கிருந்தபடியே தனது இராஜினாமா கடிதத்தை இலங்கை நாடாளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பி வைத்தார். சிங்கப்பூரில் சிறிது காலம் தங்கியிருந்த நிலையில், அங்கிருந்து, தாய்லாந்து தலைநகர் பாங்கொக்குக்குச் சென்று தஞ்சமடைந்தார்.
அங்கு சிறைக்கைதி போல் ஒரே அறையில் தங்கியிருந்தார். இந்நிலையில் 52 நாட்களுக்குப் பிறகு நேற்று நள்ளிரவு கொழும்பு வந்தடைந்தார். அவருக்கு இலங்கையின் அமைச்சர்களும், அதிகாரிகளும் மாலை சூட்டி வரவேற்பு அளித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கோட்டாபய ராஜபக்சவுக்கு காவல்துறை மற்றும் இராணுவம் அடங்கிய படைக்குழு புதிதாக அமைக்கப்பட்டு, பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புப் படைக்குழுவில் கொமாண்டோக்களும் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reported by :Maria.S