இலங்கையில் மின்சார அலகுகளின் பாவனை இருபது வீதத்தால் குறைந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் மின்சார பாவனையாளர்கள் நாளொன்றுக்கு 48 மில்லியன் யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தி வந்த போதிலும் தற்போது 38 மில்லியனாக குறைந்துள்ளதாக இந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
பல மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் மின்வெட்டு, நுகர்வோர்கள் மின்சாதனங்களை குறைந்த அளவிலேயே பயன்படுத்தும் போக்கும் இதற்குக் காரணம்.
நீர் மின் உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்புள்ள போதிலும், எரிபொருள் பற்றாக்குறையால் மின் உற்பத்தி நிலையங்கள் முடங்கும் நிலையில் உள்ளதால், அடுத்த சில மாதங்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலைமையினால் மின்வெட்டு நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லையென்றாலும், நீர்மின் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்தால், நீண்டகாலம் மின்வெட்டுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக சுமார் நூறு மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய நீர் கொள்ளளவு ஏற்பட்டுள்ளதாக விசாரணையின் போது தலைவர் சுட்டிக்காட்டினார்.
அனைத்து மின் உற்பத்தி நிலையங்கள் அல்லாத நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு இதுவரை 60 சதவீதமாக அதிகரித்துள்ளது.
—————
Reported by:Maria.S