அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் திடீர் பயணத்தை அடுத்து தாய்வானுடனான வர்த்தகத்தை சீனா கட்டுப்படுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் முக்கியப் பொருளான மணலின் ஏற்றுமதியை நிறுத்திவிட்டதாக சீன வர்த்தகம் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
அதுமட்டுமின்றி, தாய்வானுக்கான சிட்ரஸ் பழங்கள் மற்றும் சில வகையான மீன்களின் இறக்குமதியை தடை செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
ஆனால் தாய்வானில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் சில பொருட்களில் பூச்சிக்கொல்லி மருந்தின் தாக்கம் மற்றும் கொரோனா தொற்றின் அச்சம் இருப்பதால் உணவு இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதாக சீனாவின் சுங்க பொது நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, குறிப்பிடப்படாத சட்ட சிக்கல்களால் மணல் ஏற்றுமதியை நிறுத்தி வைத்துள்ளதாக வர்த்தக அமைச்சு விளக்கமளித்துள்ளது.
சீனாவின் எச்சரிக்கையை மீறி, அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தாய்வானுக்கு விஜயம் செய்துள்ள நிலையிலேயே சீனாவின் வர்த்தக அமைச்சு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்போது சீனாவின் சுங்க பொது நிர்வாகம் திங்களன்று 100க்கும் மேற்பட்ட தாய்வானிய உணவு வகைகளின் ஏற்றுமதி பதிவை புதுப்பிக்க தவறியதற்காக தடுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது.
மேலும், சீனாவின் இந்த நடவடிக்கையானது அரசியல் தூண்டுதல் என தாய்வான் குறிப்பிட்டுள்ளது. தாய்வானின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக சீனா உள்ளது, 2021 ஆம் ஆண்டில் சீனா மற்றும் ஹொங்கொங்கிற்கு தாய்வானின் ஏற்றுமதியானது 188.9 பில்லியன் டொலரை எட்டியது.
கடந்த ஆண்டு தாய்வான் அன்னாசிப்பழங்களை இறக்குமதி செய்ய சீனா தடை விதித்தது. இது தாய்வான் ஜனாதிபதி மேற்கத்திய நாடுகளுடன் இணக்கமாக செல்வதாகக் கூறி சீனாவின் மிரட்டல் என்றே கூறப்பட்டது.
———–
Reported by :Maria.S