உலக கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களின் தலைவர், பாப்பரசர் பிரான்சிஸ் தற்போது கனடா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அங்கு 19ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்க திருச்சபைகளால் நடத்தப்பட்ட வதிவிடப் பாடசாலைகளில் தங்கிப்படித்து வந்த பழங்குடியின மாணவர்கள், உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது குறித்து பாப்பரசர் தனது வேதனையை வெளிப்படுத்தியதோடு மட்டுமின்றி, அதற்காக அவர் மனதார மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
அங்கு அல்பெர்டா மாகாணத்திலள்ள மாஸ்க்வாசிஸ் நகரத்தில் 19ஆம் நூற்றாண்டில் தேவாலயப் பாடசாலையாக விளங்கிய எர்மெனிஸ்கின் வதிவிட பாடசாலைக்குச் சென்றிருந்தபோதுதான், பாப்பரசர் இவ்வாறு மன்னிப்பைக் கேட்டார்.
அங்கு அவருக்கு பழங்குடியின மக்களின் பாரம்பரிய கிரீடத்தை அணிவித்தனர். அந்தக் கிரீடத்தில் வெண்மையான வெள்ளைச் சிறகுகள், வண்ணமயமான மணிகள் இடம்பெற்றிருந்தன.
அந்தக் காலத்தில் கத்தோலிக்க திருச்சபை வதிவிடப் பாடசாலையில் துன்புறுத்தல்களுக்கு மத்தியில் உயிர் தப்பிய சீப் வில்டன் லிட்டில்சைல்ட் என்பவர் அந்தக் கிரீடத்தை பாப்பரசருக்கு அணிவித்தபோது அங்கிருந்த பழங்குடியின மக்கள் அனைவரும் கைதட்டி ஆர்ப்பரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அப்போது தனக்கு பாரம்பரிய கிரீடம் அணிவித்தவரின் கைகளில் பாப்பரசர் பிரான்சிஸ் முத்தமிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இந்தக் கிரீடம், பூர்வீக அமெரிக்க படைத்தளபதிகள், போர் வீரர்கள் அணியும் மரியாதையின் சின்னமாக விளங்கியதுடன் வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்பது குறிப்பிடத்தக்கது.
Reported by :Maria.S