புகையிரத செலவினத்துடன் ஒப்பிடுகையில் வருமானம் அதிகரிக்கவில்லை – அமைச்சர் பந்துல

இலங்கை புகையிரத திணைக்களத்துக்கு இவ்வருடம் நாளொன்றுக்கு 10 கோடி ரூபாவிற்கும் அதிகமான நட்டம் ஏற்படுவதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். நீண்ட காலமாக புகையிரதச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், வருமானம் அதிகரிக்காததால் திணைக்களத்தின் இழப்பு ‘வியக்கத்தக்க வகையில்’ அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


நேற்று (26) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
2021 ஆம் ஆண்டில் புகையிரத திணைக்களத்தின் வருமானம் 2.6 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, அந்த வருடத்தில் திணைக்களத்தின் மொத்த நட்டம் 34 பில்லியன் ரூபா எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

 
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், 2022ஆம் ஆண்டு புகையிரத ஊழியர்களின் சம்பளத்துக்காக 07 பில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளதாகவும், 2021ஆம் ஆண்டு திணைக்களத்தின் மேலதிக நேர கொடுப்பனவுகளுக்காக 2.7 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

 
இந்த நஷ்டத்தைக் குறைக்கும் வகையில் புகையிரதக் கட்டணத்தை அதிகரிக்க திணைக்களம் நடவடிக்கை எடுத்ததாக சுட்டிக்காட்டிய அமைச்சர், புகையிரதக் கட்டணத்தை உயர்த்தினாலும் அது பஸ் கட்டணத்தில் பாதியே எனவும் மேலும் குறிப்பிட்டார்.


புகையிரத பயணிகள் கட்டணம், புகையிரத பயணிகள் எரிபொருள் போக்குவரத்துக் கட்டணம் மற்றும் புகையிரத அஞ்சல் போக்குவரத்துக் கட்டணங்கள் திருத்தம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
———-
Reported by :Maria.S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *