தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்குத் தீர்வாக நாட்டில் பலர் துவிச்சக்கர வண்டிகளுக்கு பழகி வருவதாகவும் இதன் காரணமாக உதிரிப் பாகங்களின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
துவிச்சக்கர வண்டி மீண்டும் பிரபலமடைந்து வருவதால் அதிக தேவை ஏற்பட்டுள்ளதாக ஹொரணை வர்த்தகர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.
‘‘விற்பனை செய்ய முடியாமல் பல மாதங்களாக காட்சியறைகளில் இருந்த சைக்கிள்கள் இன்று அதிக கிராக்கியுடன் விற்கப்படுகின்றன. அந்தத் தேவையால், 10,000-15,000 ரூபாவுக்கு விற்கப்பட்ட சைக்கிள்களை இன்று 80,000-95,000 ரூபாவுக்கு விற்கிறோம். அதில், டயர், டியூப் மற்றும் இதர உபகரணங்களின் விலையும், அதை விட அதிகரித்துள்ளது” என, வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது சைக்கிள் ஓட்டும் பழக்கம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தனர். குறிப்பாக வேலைக்குச் செல்பவர்கள், சாதாரண பயணங்களுக்குச் செல்பவர்கள் தற்போது சைக்கிள் ஓட்டப் பழகி விட்டனர்.
குறிப்பாக ஹொரணை, இங்கிரிய, பண்டாரகம, பாணந்துறை, களுத்துறை, மத்துகம போன்ற முக்கிய நகரங்களில் மக்களின் போக்குவரத்துக்கு சைக்கிள் ஒரு வழியாக மாறியுள்ளது. சட்டத்தரணிகள், அலுவலகப் பணியாளர்கள், ஆசிரியர்கள், கள அலுவலர்கள், அரசு அலுவலர்கள் கூட சைக்கிளில் வேலைக்கு வந்து செல்வது வழக்கமான காட்சியாகி விட்டது.
இவ்வாறு சைக்கிள் ஓட்டிச் செல்வதன் மூலம் உடல் நிலையை நன்கு பராமரிக்க முடியும் என்பது மருத்துவரின் கருத்தாகவும் உள்ளது.
————–
Reported by : Maria.S