தற்போதைய நிலைமை காரணமாக அரச ஊழியர்களுக்கு இம்மாதம் உரிய திகதியில் சம்பளம் வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்படும் என சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் நேற்று (12) சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
சம்பளம் வழங்குவதற்கு பணம் அச்சிடப்பட்டு அதற்கான அமைச்சரவைத் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்.
தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் அமைச்சரவைக் கூட்டத்தை அழைப்பதில் சிக்கல் இருப்பதாகவும், அதனைத் தவிர்ப்பதற்கு சில நாட்களுக்கு ஜனாதிபதியாக செயற்படவுள்ள ரணில் விக்ரமசிங்கவினால் அவசர அமைச்சரவைக் கூட்டத்தை அழைப்பது மாத்திரமே அவசியமானது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அவசர அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்படாவிட்டால் எதிர்வரும் 25ஆம் திகதி சம்பளத்தை வழங்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையின் முடிவு நாணயச் சபைக்கு அனுப்பப்பட்ட பின்னர் பணத்தை அச்சிடுவதற்கு சட்டப்பூர்வமான இடம் வழங்கப்படும்.
மேலதிக நேரம், விடுமுறைகள், வாழ்க்கைச் செலவுகள் என சகல கொடுப்பனவுகளையும் தவிர்த்து சம்பளத்துக்கு மாத்திரம் மாதாந்தம் சுமார் இருபத்தொன்பது பில்லியன் ரூபா தேவைப்படும் எனக் கூறப்படுகிறது.
—————-
Reported by: Maria .S