கனடாவில் ஐந்து குழந்தைகளை அறைந்து, மண்டியிடச் செய்து, இழுத்துச் சென்ற குற்றத்தை ஒப்புக்கொண்ட முன்னாள் தினப் பராமரிப்பு ஊழியரான தமிழ் பெண்ணை வீட்டுக்காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது 52 வயதாகும் மாக்டலீன் வசந்தகுமார், மேப்பிள் அவென்யூவில் உள்ள பிரைட் பாத் மேப்பிள் நிறுவனத்தில் பணிபுரிந்தார். ஒன்ட், மில்டனில் உள்ள BrightPath Early Learning Centre இல் மாக்டலீன் வசந்தகுமார் குழந்தைகளை அறைவது, மண்டியிடச் செய்வது, அவர்களின் தலைமுடியை இழுப்பது, காதுகளை முறுக்குவது மற்றும் தரையில் இழுத்துச் செல்வது போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காணொளிகள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில் வியாழனன்று மில்டன் நீதிமன்றத்தில் ஐந்து தாக்குதல் வழக்குகளில் மாக்டலீன் வசந்தகுமார் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து குற்றவாளிக்கு சமூகத்தில் அனுபவிக்க 15 மாத நிபந்தனையுடன் கூடிய தண்டனையை நீதிபதி வழங்கியதுடன் முதல் ஏழு மாதங்கள் வீட்டுக் காவலில் முடிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த பெண்ணுக்கு போதுமான தண்டனை வழங்கப்படவில்லையென பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் தாயார் தெரிவித்துள்ளதுடன் “இது நியாயமில்லை. நான் தேடிக்கொண்டிருந்த நீதி இதுவல்ல என்று உணர்கிறேன் – இவர்கள் குழந்தைகள்” என்று அவர் கூறினார். மாக்டலீன் வசந்தகுமார் நிச்சயம் சிறைக்குச் செல்லத் தகுதியானவள்.
ஒவ்வொரு குழந்தைக்கும், பெற்றோராகிய எங்களுக்கும் அவள் ஏற்படுத்திய வலியை வார்த்தைகளால் விபரிக்க முடியாது. நாம் எப்படி வேதனைப் பட்டோமோ அப்படியே அந்தப் பெண்ணும் கஷ்டப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
குழந்தைகளிடம் தவறாக நடத்துதல் அல்லது இரக்கமற்ற நடத்தை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், எங்கள் எந்த மையத்திலும் ஒருபோதும் பொறுத்துக்கொள்ளப்படாது என நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
————-
Reported by : Maria.S