இங்கிலாந்தில் ரயில்வே ஊழியர்கள், சம்பளத்தை உயர்த்தக் கோரி நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். நாட்டில் விலைவாசி உயர்வுக்கு ஈடாக தங்களது சம்பளம் போதவில்லை என்றும் 11 சதவீதம் உயர்த்த வேண்டும் என்றும் ஊழியர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
50 ஆயிரம் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் இங்கிலாந்து முழுவதும் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரயில் சேவை முடங்கிப் போய் இருக்கிறது. ரயில்கள் இயக்கப்படாததால் ஆயிரக்கணக்கானோர் பஸ்கள், கார்களில் அலுவலகங்கள், மற்ற இடங்களுக்குச் செல்கிறார்கள். இதனால் வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. மேலும் வாடகைகார்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. பஸ் நிறுத்தங்களில் ஏராளமான மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இதற்கிடையே போராட்டத்தைக் கைவிட இங்கிலாந்துப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறும்போது, இங்கிலாந்து மக்கள் மற்றும் ரயில் பணியாளர்களின் நலனுக்காக ஒரு விவேகமான சமரசத்துக்கு வர வேண்டிய நேரம் இது என்றார்.
Reported by:Anthonippillai.R