இலங்கை மத்திய வங்கி கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் மேலும் 104 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளதாக உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்க செலவினங்களை ஈடுசெய்ய மேலும் ஒரு இலட்சம் கோடி ரூபாவை அச்சிட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ள பின்னணியில், கடந்த மே 11ஆம் திகதிக்கும் மே 24ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் மத்திய வங்கி இந்தத் தொகையை அச்சிட்டுள்ளது.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய பிரதமர், எதிர்வரும் மாதங்களில் நாட்டின் பணவீக்கம் 40% ஐ தாண்டும் எனச் சுட்டிக்காட்டியிருந்தார்.
அரசாங்கம் வரிகளை அதிகரிக்காவிட்டால் அரசாங்க செலவினங்களுக்கு பணத்தை அச்சிட வேண்டியிருக்கும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க முன்னர் தெரிவித்திருந்தார்.
கடந்த இரண்டு வாரங்களில் அதிகபட்சமாக மே 20ஆம் திகதி தான் பணம் அச்சிடப்பட்டுள்ளது. கலாநிதி வீரசிங்க மத்திய வங்கியின் ஆளுநராகப் பதவியேற்ற பின்னர் ஒரே நாளில் அச்சிடப்பட்ட மிகப் பெரிய தொகை இதுவாகும். அந்த எண்ணிக்கை 85.3 பில்லியன் ரூபாவாகும்.
இலங்கை மத்திய வங்கி 2022 இல் இதுவரை 572 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் அச்சிடப்பட்ட பணத்தின் நிலையான அளவு 1.2 டிரில்லியன் ரூபாயாகும், 2020 ஆம் ஆண்டில் அது 650 பில்லியன் ரூபாயாக இருந்தது.
—————-
Reported by:Anthonippillai.R