ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பதவி விலகல் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் மேலதிக நடவடிக்கை எடுப்பதாகவும், அது தொடர்பில் பெரும்பான்மையினரின் தீர்மானத்திற்கு இணங்குவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
கட்சி சார்பற்ற அரசாங்கத்தை உருவாக்குவது மற்றும் நாட்டைக் கட்டியெழுப்புவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில், பிரதமர் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தை விரைவில் நிறைவேற்றுவதன் மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்களை மட்டுப்படுத்தி பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறக்கூடிய நிறைவேற்று அதிகாரமொன்றை உருவாக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
21 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஆராய்வதற்காக கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், விரைவில் திருத்தங்கள் நிறைவேற்றப்படுமென நம்புவதாகவும் பிரதமரின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டை ஸ்திரப்படுத்தியவுடனேயே பொதுத்தேர்தலை நடத்துவதில் தமக்கு ஆட்சேபனை இல்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், எதிர்வரும் சில மாதங்களுக்கு அர்ப்பணிப்புடனும் கூட்டாகவும் செயற்பட்டு நாட்டை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ள பிரதமர், கட்சி சார்பற்ற அரசாங்கத்தை அமைப்பதற்கு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவையும் கோரியுள்ளார்
Report by : Anthonippillai .R