ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்குப் பகுதியில் உள்ள கலிபா ஷகிப் மசூதியில் ஏராளமானோர் தொழுகை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென மசூதியில் பயங்கர குண்டு வெடித்தது. தொழுகையில் ஈடுபட்டிருந்த பலர் இரத்த வெள்ளத்தில் சிதறினர். இந்தக் குண்டு வெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்து கீழே கிடந்தனர். அவர்களை மீட்ட காவல்துறையினர் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து மசூதியின் தலைவர் சையத் பசில் கூறும்போது, தொழுகையின் போது எங்களுடன் தற்கொலை தாக்குதல் நடத்தும் நபர் இணைந்ததாகவும், குண்டை வெடிக்கச் செய்ததாகவும் கூறியுள்ளார். சன்னி பிரிவினர் வழிபாடு நடத்தும் மசூதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் முஜாஹித் கூறும்போது, மசூதியில் நடந்த தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இதில் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என கூறியுள்ளார்.
இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆப்கானிஸ்தான் ஷியா-சன்னி பிரிவினர் இடையே அடிக்கடி மோதல் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் சமீப காலமாக நடந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கது.
Reported by : Sisil.L