மட்டக்களப்பில் இலங்கை வங்கிச் சங்கம் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து கோட்டா வீடுக்குப் போக என்ற தொனிப் பொருளில் காந்தி பூங்காவுக்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் இன்று வியாழக்கிழமை (28) ஈடுபட்டனர்.
இன்று நாடளாவிய ரீதியில் தொழிற் சங்கங்கள் ஒன்றிணைந்து போராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததையடுத்து மட்டக்களப்பில் இலங்கை வங்கிச் சங்கம் மற்றும் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் இன்று காலை 11.00 மணிக்கு காந்தி பூங்காவில் ஒன்றிணைந்தனர்.
இவ்வாறு ஒன்றிணைந்தவர்கள் கோட்டா கோ கோம், வெளிநாட்டு கறுப்பு சந்தை மாபியாவை தடை செய்க, அவசரகால சட்டத்தை நீக்கு, அதிகரிக்கும் வாழ்க்கை செலவைக் குறை, போன்ற பல்வேறு வாசகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாகச் சென்றவர்கள் காந்தி பூங்காவிலிருந்து ஆரம்பித்து கோட்டமுனை பாலம் ஊடாக மட்டு. தலைமையக பொலிஸ் நிலைய வீதி சுற்றுவட்டத்தைச் சென்று அங்கிருந்து மீண்டும் காந்தி பூங்காவை வந்தடைந்தனர்.
அங்கு தொடர்ந்து கோஷங்கள் எழுப்பியவாறு சுமார் ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
—————-
Reported by : Sisil.L