80களின் நாயகன் நடிகர் சக்கரவர்த்தி காலமானார்

1980களில் பிரபலமாக இருந்த பிரபல நடிகர் சக்கரவர்த்தி மாரடைப்பால் இன்று மரணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.தமிழ் திரையுலகில் சிவாஜி, ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான சக்ரவர்த்தி இன்று (ஏப்ரல் 23) காலை மும்பையில் காலமானார். அவருக்கு வயது 62.

 கடந்த 1970 மற்றும் 80களில் அதிகமான தமிழ்ப் படங்களில் சக்ரவர்த்தி நடித்துள்ளார். இதுவரை 80 திரைப்படங்களில் அவர் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ரிஷி மூலம், ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளில்லாத ரோஜா உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார்.


சிகப்பு ரோஜாக்கள் படத்தில் நடிகை வடிவுக்கரசியின் அண்ணனாக சிறு வேடத்தில் நடித்தார் சக்கரவர்த்தி. தொடர்ந்து ரஜினியின் கிளாசிக் படமான ‘ஆறிலிருந்து அறுபது வரை’ படத்தில் தம்பியாக நடித்தார். ‘ரிஷி மூலம்’ படத்தில் சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்து தனது அழுத்தமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார். ‘முள்ளில்லாத ரோஜா’ படத்தில் வாய் பேச முடியாதவராக நடித்து அசத்தினார்.


தர்ம யுத்தம்’, தூக்கு மேடை’, ‘கொட்டு முரசே’, ‘உதயகீதம்’, ‘புதிய பயணம்’, ‘இதயம் தேடும் உதயம்’, ‘முள்ளில்லாத ரோஜா’, ‘ராஜாதி ராஜா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.


 70களின் இறுதியில் தொடங்கி 80கள் கடைசி வரை கிட்டத்தட்ட 100 படங்களில் சிவாஜி, ரஜினி, கமல், சிவகுமார் உள்ளிட்ட நடிகர்களின் படங்களில் அண்ணன், மகன், நண்பன் என பல்வேறு விதமான குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். ஓரிரு படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.


சினிமாவிலிருந்து விலகிய சக்கரவர்த்தி மும்பையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். தனியார் தொலைக்காட்சியில் பின்னணிக் குரல் கொடுக்கும் கலைஞராக அவர் இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  


சக்கரவர்த்திக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சக்கரவர்த்தியின் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
————-
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *