முன்னாள் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரான பேரின்பநாதன் அவர்கள் கனடாவில் உயிரிழந்துள்ள நிலையில் பலரும் இரங்கலைக் கூறி வருகின்றனர்.
யாழ். பல்கலைக்கழகத்தில் 1988 – 1989 காலப் பகுதியில் முதலாம் வருடத்தில் பொருளியலையும் ஒரு பாடமாகக் கற்ற கலைப்பீட, வர்த்தக பீட மாணவர்களுக்கு நுண்பொருளியல் (Microeconomics) விரிவுரையாளராக அப்போதைய சிரேஷ்ட விரிவுரையாளர் பேரின்பநாதன் விரிவுரையாற்றினார்.
இரண்டு பீடங்களின் மாணவர்கள் எடுக்கும் பொதுவான பாடம் என்பதால் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் பொருளியலைக் கற்பவர்களாக இருப்பார்கள். கைலாசபதி கலையரங்கில் பொருளியல் விரிவுரைகள் நடைபெறும். பேரண்டப் பொருளியல் (Macro economics) விரிவுரையை மறைந்த பேராசிரியர் பாலகிருஸ்ணன், ஓய்வுநிலைப் பேரசிரியர் நித்தியானந்தன் ஆகியோர் நிகழ்த்தியிருந்தனர்.
அதேவேளை 1980களில் சிறந்த விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் குழாத்தை தன்னகத்தே கொண்டிருந்த சிறந்த பல்கலைக்கழகமாக யாழ். பல்கலைக்கழகம் விளங்கியது. ஆனால் துர்ப்பாக்கியம் பல புத்திஜீவிகளை யுத்தம் எனும் கோர அரக்கன் வெளியேற்றியது.
அந்த வகையில் இன முரண்பாடும், யுத்தமும், அரசியல் சூழலும் வெளியேற்றிய கல்விமான்களில் பேரின்பநாதனும் ஒருவர் ஆவார்.
வடக்கு, கிழக்கை வளப்படுத்தக் கூடிய பல கல்வியாளர்களை யுத்தம் புலம்பெயர வைத்ததால் இன்று அவர்கள் புலம்பெயர் தேசங்களில் மரணித்துக்கொண்டு இருக்கிறார்கள் என சமூக ஆர்வலர்களும் கல்விமான்கள் பலரும் வேதனை வெளியிட்டுள்ளனர்.
——–
Reported by : Sisil.L