இலங்கை பொருளாதார நெருக்கடி: தமிழகத்தை சென்றடைந்த இலங்கைத் தமிழர்கள்

மோசமடையும் இலங்கைப் பொருளாதாரத்தின் தாக்கத்தை தற்போது தமிழக கடற்கரைகளிலும் உணரும் நிலை உருவாகியுள்ளது.
செவ்வாய்க்கிழமை அன்று, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதியைச் சேர்ந்த 16 இலங்கைத் தமிழர்கள், 2 குழுவாக தமிழகத்தை வந்தடைந்துள்ளனர். மூன்று குழந்தைகளுடன் தமிழகம் நோக்கி வந்த அவர்கள் ராமேஸ்வரம் அருகே உள்ள தீவில் தனித்துவிடப்பட்டிருந்தனர். அவர்களை இந்திய கப்பற்படை வீரர்கள் பாதுகாப்பாக அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது. 10 பேரைக் கொண்ட மற்றொரு குழு இரவு தமிழகத்தை அடைந்தது.


வேலையின்மை மற்றும் உணவுப் பற்றாக்குறை இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற காரணத்தால் அகதிகளாக அவர்கள் தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர் என்று தமிழக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழர்களை அதிகமாகக் கொண்டிருக்கும் வடக்கு மாகாணத்தில் இருந்து வரும் செய்திகள், இது வெறும் துவக்கம்தான் என்பதை எச்சரிக்கின்றன. வருகின்ற வாரங்களில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் தமிழகத்தை நோக்கி வரலாம் என்று உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


கஜேந்திரன் (24), அவருடைய மனைவி மேரி குளோரின் (22), அவர்களின் மகன் நிஜாத் (4 மாதம்), மற்றும் தியோரி அனிஸ்டன் (28), அவரின் குழந்தைகள் எஸ்தர் (9) மற்றும் மோசஸ் (6) என முதலில் 6 பேர் தமிழகத்திற்கு வந்துள்ளனர். மற்றொரு குழுவில் 3 பெண்களும், 5 குழந்தைகளும் அடங்குவார்கள்.
கடந்த சில வாரங்களாக இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் தவித்த அம்மக்கள் அங்கிருந்து வெளியேற முடிவு செய்துள்ளனர். மீனவர் ஒருவருக்கு ரூ. 50 ஆயிரம் கொடுத்து அரிச்சல் முனை அருகே அமைந்திருக்கும் நான்காவது தீவில் இறக்கிவிட கூறியதாக, முதலில் வந்த 6 பேர் கொண்ட குழு குறிப்பிட்டுள்ளது. உணவு, எரிபொருள் மற்றும் வருவாய் பற்றாக்குறை காரணமாக பெரும்பாலான குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.


ஹோவர் படகு மூலம் அழைத்துவரப்பட்ட அவர்களுக்கு கடற்படை முகாமில் உணவு கொடுக்கப்பட்டு பிறகு காவல்துறையிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் ராமேஸ்வரத்தில் இருக்கும் மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.


ரூ. 3 லட்சம் கொடுத்து ஃபைபர் படகில் மற்றொரு குழு நேற்றிரவு தமிழகம் வந்தடைந்தது. மன்னாரில் இருந்து தமிழகம் நோக்கி வந்த அந்தப் படகில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட, ஒரு நாள் முழுவதும் நடுக்கடலில் தத்தளித்துள்ளனர் அம்மக்கள். பிறகு அந்தக் கோளாறு சரி செய்யப்பட்டு இரவு 9 மணிக்கு ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் பாலத்தை வந்தடைந்தனர்.


எனக்குத் தெரிந்த நிறைய நபர்கள் நாட்டை விட்டு வெளியேறும் முடிவை எடுத்துள்ளனர் என்று கூறுகிறார் மன்னாரில் இருக்கும் செயற்பாட்டாளர் வி.எஸ். சிவகரன். இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய அவர், ”அவர்களில் ஒரு சிலருக்கு தமிழகத்தில் தொடர்பு உள்ளது. ஒரு சிலரின் உறவினர்கள் முகாம்களில் வசித்து வருகின்றனர். நாளை என்ன நடக்கும் என்ற அச்சம் எங்கள் மத்தியில் இருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் ஒரு கிலோ அரிசியின் விலை ரூ. 500-ஐத் தொட்டுவிடும். இன்று ஒரு கிலோ அரிசி 290 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சீனியும் அதே விலைக்கு விற்கப்படுகிறது. 400 கிராம் பால் பவுடர் 790க்கு விற்பனை செய்யப்படுகிறது” என்று கூறினார்.


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *