டீசல் தட்டுப்பாடு காரணமாக பலாங்கொடை பிரதேசத்தில் பச்சைத் தேயிலை போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி பச்சைத் தேயிலை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கிராமப்புறங்களில் இருந்து நகரைச் சுற்றியுள்ள தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு தினமும் பச்சைத் தேயிலைக் கொழுந்துகளை ஏற்றிச் செல்வதற்கு லொறிகள் அதிக அளவில் எரிபொருளைப் பயன்படுத்துவதாகவும் தேயிலை விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் கிடைப்பதில்லை எனவும் குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குறைந்தளவிலான எரிபொருள் விநியோகம் செய்யப்படுவதால் குறித்த பகுதிகளுக்கு பச்சைத் தேயிலைக் கொழுந்துகளை சேகரிக்கும் வகையில் லொறிகளை செலுத்துவதற்கு போதிய எரிபொருள் கிடைப்பதில்லை எனவும் தேயிலை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
எரிபொருள் பற்றாக்குறையால் பல தேயிலை வியாபாரிகள் ஒரே லொறியில் தேயிலைக் கொழுந்துகளை ஏற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
பச்சைத் தேயிலைக் கொழுந்துகளை குறித்த நேரத்தில் தேயிலை தொழிற்சாலைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் எனவும், தாமதமானால் தரமான தேயிலைத் தூளை உற்பத்தி செய்ய முடியாது எனவும் தேயிலைத் தொழிற்சாலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், டீசல் தட்டுப்பாடு காரணமாக, பச்சைத் தேயிலைக் கொழுந்துகளை குறித்த நேரத்தில் தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது என, தேயிலை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
பலாங்கொடை பிரதேசத்தில் 60 வீதமான மக்கள் தேயிலைத் தொழிலையே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் தட்டுப்பாடு இன்னும் சில நாட்களுக்கு நீடித்தால், அப்பகுதி தேயிலைத் தொழில் கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என, தேயிலைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
——Reported by : Sisil.L——-