சிவராத்திரி திருநாளான எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி முழுமை யாக தடுப்பூசி பெற்றவர்கள் மட்டுமே திருக்கேதீஸ்வரம் ஆலயத் திருவிழாவுக்கு அனுமதிக்கப்படுவர் என்று மன்னார் மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் மருத்துவர் ரி. வினோதன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் திருவிழாவில் பங்கேற்போர் 3ஆவது அல்லது பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்று 2 வாரங்கள் நிறைவடைந்திருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், மன்னார் மாவட்டத்தில் கடந்த 16 நாட்களில் 377 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப் பட்டுள்ளனர். 2022 ஆம் ஆண்டில் மட்டும் 578 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் பெப்ரவரி மாதம் 3 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளன. தற்போது வரை மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 39 பேர் மரணித்துள்ளனர். ஒமிக்ரோன் அலை பரவல் தொடங்கியதில் இருந்து இறந்தவர்களின் எண்ணிக்கை மன்னார் மாவட்டத்தில் 3 ஆகும். ஒவ்வொரு 120 நோயாளர்களுக்கும் ஒருவர் என்ற வகையில் இறப்பு இடம் பெற்றுள்ளது. இது டெல்டா அலை பரவும் போது ஏற்பட்ட இறப்புகளுடன் ஒப்பிடும் போது குறைவாக இருந்தாலும்,இதனைக் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒரு எண்ணிக்கையாக காணப்படுகின்றது.
எனவே, பொது மக்கள் தமது 2ஆவது தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட பின்னர் மூன்று மாதங்கள் நிறைவடைந்திருந் தால் கட்டாயமாக 3ஆவது தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அத்துடன் சுகாதார வழிகாட்டுதல்களையும் கடைப்பிடிக்க வேண்டும் – என்றார்.
————-
Reported by : Sisil.L