பஹ்ரைன் நாடு பல்வேறு திறமைகளைக் கொண்ட தனி நபர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு தங்கள் நாட்டில் நிரந்தர வதிவிடத்துக்கான வாய்ப்புகளை வழங்க முடிவு செய்துள்ளது.
இதற்கமைய புதிய ‘நிரந்தர குடியிருப்பு விசா’ வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதன் மூலம் திறமையான தொழிலாளர்களையும் முதலீட்டையும் தங்கள் நாட்டுக்கு ஈர்ப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என அவர்கள் கூறுகிறார்கள்.
தற்போது வரை, நாட்டுக்கு வேலைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு ஆண்டுதோறும் பணி விசாவை நீட்டிக்கும் நடைமுறை வழக்கத்திலுள்ளது. இது அவர்கள் நாட்டில் நீண்ட காலம் தங்குவதைக் கட்டுப்படுத்தியது.
புதிய நடைமுறை ‘கோல்டன் ரெசிடென்சி விசா’ என்று அழைக்கப்படுகிறது. பஹ்ரைனில் பணி புரியவும், தேவைப்படும்போது மீண்டும் நுழைந்து வெளியேறவும், குடும்ப உறுப்பினர்கள் நாட்டில் வசிக்கவும் இவ்விசா அனுமதிக்கிறது.
“இந்த விசா நடைமுறையின் நோக்கம் முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் திறமையானவர்களை நாட்டுக்கு ஈர்ப்பதும், அதன் மூலம் பஹ்ரைன் பொருளாதாரத்தை வெற்றியடையச் செய்வதும் ஆகும்” என்று அந்நாட்டு உள்துறை அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இவ்விசாவுக்குத் தகுதி பெற, ஒருவர் 5 வருடங்கள் நாட்டில் வாழ்ந்திருக்க வேண்டும் மற்றும் 2,000 பஹ்ரைன் தினார் ( 5,306 டொலர்) மாதச் சம்பளம் பெற்றிருக்க வேண்டும்.
Reported by : Sisil.L