வவுனியாவில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

வவுனியாவில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியினரால் வவுனியா பழைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இன்று (08) காலை குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்த போது,மஹிந்த, கோட்டா அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் உழைக்கும் மக்கள் நடுவீதிக்கு தள்ளப்பட்டுள்ளதுடன், அவர்களது வயிற்றிலே அடிக்கும் அவல நிலையை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது.


இந்த நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் நாட்டில் பட்டினிச்சாவு ஏற்படும் அபாய நிலைமை ஏற்படுவதை எவராலும் தடுக்க முடியாது.
நாட்டைக் கொள்ளையடித்தவன், நாட்டுப் பணத்தை திருடியவன் எல்லாம் அதிகாரத்தில் இருந்து சுகபோக வாழ்க்கை வாழ்கின்றனர். ஆனால் சாதாரண மக்கள் இவர்களுக்கு வாக்களித்த குற்றத்தைத் தவிர வேறொன்றுமே செய்யவில்லை.


கடந்த தேர்தல் காலங்களில் கோட்டாவும், மகிந்தாவும் கொடுத்த வாக்குறுதிகளால் மக்களின் பசியைத் தீர்க்க முடிந்ததா? எனவே இராணுவமயமாகி வரும் இந்தக் கொடுங்கோல் ஆட்சியை அழித்தொழிக்க நாட்டு மக்கள் ஒன்று திரண்டு தமது எதிர்ப்பை வெளிக்காட்ட முன்வர வேண்டும் என்றனர்.


ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் உழைக்கும் மக்களை பட்டினி போடாதே, கட்டுப்பாட்டு விலையைக் கொண்டுவா, ஊழல் பணத்தை வெளியே கொண்டு வா, உழைப்போரை வதைக்காதே, தேர்தல் வாக்குறுதி என்னாச்சு போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோஷங்களையும் எழுப்பியிருந்தனர்.


ஆர்ப்பாட்டத்தில் புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிச கட்சியின் செயலாளர் சி.கா.செந்தில்வேல், கட்சியின் முக்கியஸ்தர்களான செல்வம் கதிர்காமநாதன், நி.பிரதீபன், வவுனியா தமிழரசுக் கட்சியின் அமைப்பாளர் ந.கருணாநிதி, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வவுனியா கிளையின் பா.நேசராஜா, சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினர் உட்பட பொது அமைப்புக்கள் ஆதரவை வழங்கியதுடன், பெருமளவான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
———————
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *