நாடு கொரோனாவை எதிர்கொள்வதற்காக வர்த்தக இழப்பு, பள்ளிகள் மூடல் போன்ற கட்டுப்பாடுகளுக்கு தன்னை உட்படுத்திக் கொண்டுள்ள நிலையில், எந்த விதிகளையும் மதிக்காமல் விமானத்தில் ஒரு கூட்டம் கனேடிய சமூக ஊடக பிரபலங்கள் விருந்து நடத்திய விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அது குறித்து ஊடகவியலாளர்களின் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மற்ற கனேடியர்களைப் போல, தானும் அந்த விமான விருந்துபசார வீடியோவைப் பார்த்ததாகவும், அதைப் பார்த்து தான் கடும் எரிச்சலடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மக்கள் தங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்காக எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள், கிறிஸ்மஸ் பண்டிகை நேரத்தில் கூட குடும்ப உறுப்பினர்களை சந்திப்பதைக் கூட கட்டுப்படுத்திக்கொண்டு, மாஸ்க் அணிந்துகொண்டு மக்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்ள பாடுபடும் நேரத்தில், இப்படி தங்கள் சக குடிமக்களுக்கும், விமான ஊழியர்களுக்கும் அபாயகரமான சூழலை ஏற்படுத்தியுள்ள இவர்களது செயல் முகத்தில் அறைவதற்கு சமமான அவமதிக்கும் செயலாகும் என்றார் ட்ரூடோ.
இதற்கிடையில், இப்படி நாட்டின் பிரதமர் முதலானவர்களிடம் திட்டு வாங்குவதுடன் அந்த விருந்துபசாரம் நடத்தியவர்கள் தப்பித்துவிடமுடியாது. பெடரல் அரசு அவர்கள் மீது விசாரணை ஒன்றைத் ஆரம்பித்துள்ளது.
அத்துடன், ஒரு குற்றச்செயலுக்கு 5,000 கனேடிய டொலர்கள் வீதம், கடுமையான அபராதமும் அந்த விருந்துபசாரத்தில் பங்கேற்றவர்கள் செலுத்த வேண்டி வரும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் முதலனாவர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளார்கள்.
111 Private Club என்ற குழுவைச் சேர்ந்த சமூக ஊடக பிரபலங்கள், டிசம்பர் 30ஆம் திகதி, கனடாவின் மொன்றியலிலிருந்து மெக்சிகோவிலுள்ள Cancun என்ற இடத்துக்கு விமானம் ஒன்றில் பயணித்துள்ளார்கள். அப்போது, அவர்கள் முகக்கவசம் அணிவது முதலான எவ்வித விமான கட்டுப்பாடுகளையோ, கொரோனா விதிமுறைகளையோ பின்பற்றவில்லை. அத்துடன், மது அருந்திக்கொண்டும், கஞ்சா புகைத்துக்கொண்டும் நடுவானில் ஆட்டம் போட்டுள்ளார்கள்.
இது தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து கடும் சர்ச்சை உருவாகவே, அரசு அவர்கள் மீது அபராதம் முதல் சிறைத்தண்டனை முதலான கடும் நடவடிக்கைகள் எடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Reported by : Sisil.L