யாழ். போதனா வைத்தியசாலையில் மருத்துவர்கள் நேற்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நோயாளர்கள் சிரமத்துக்கு உள்ளாகினர் என போதனா மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் சி. யமுனாநந்தா தெரிவித்தார்.
அரச வைத்திய சேவையில் உள்ளோர் நேற்று நாடு முழுவதும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட நிலையில் அங்கும் வேலைநிறுத்தப் போராட்டம் இடம்பெற்றது.
குறிப்பாக வெளிநோயாளர் பிரிவு இயங்கவில்லை. அத்தியாவசியமான மருத்துவ சேவைகள் மாத்திரம் இயங்கின. அத்தோடு வெளிநோயாளர் பிரிவில் நாய்க்கடிக்கு உள்ளாகியோருக்கு சிகிச்சை நடைபெற்றது. அதேபோல் கொரோனா தடுப்பு மருந்து வழங்கல் மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் அத்தியாவசியமான சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுகின்றது. இந்தச் சிரமங்களுக்கு மனம் வருந்துகிறோம் எனத் தெரிவித்தார்.
உண்ணிக்காய்ச்சல், டெங்கு, மலேரியா நோய் தொடர்பில் யாழ்ப்பாண மக்கள் அவதானமாகச் செயற்படுங்கள் எனவும் மருத்துவர் யமுனானந்தா கோரினார்.
உண்ணிக்காய்ச்சல் என்பது மழைக்குப் பின்னரான காலத்தில் வயல்களில், தோட்டங்களில் வேலை செய்யும்போது தொற்றுகின்ற நோயாகக் காணப்படுகின்றது. இதனை ஆரம்பத்திலேயே சிகிச்சை அளித்தால் பாதுகாக்கலாம். தவறும்பட்சத்தில் உயிரிழப்பு ஏற்படலாம். எனவே நாய், பூனைகளுடன் தொடர்பில் இருப்பவர்கள் கவனமாக இருத்தல் வேண்டும்.
காய்ச்சல் வரும்போது உரிய மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.
இதேபோல டெங்குக் காய்ச்சலும் இந்த மழையுடன் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டும்.
யாழ். போதனா வைத்தியசாலையில் சுமார் 10 நோயாளர்கள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றார்கள். எனவே, பொதுமக்கள் தம்மை டெங்கு நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள சுற்றுச்சூழலை சுகாதாரமாக வைத்திருத்தல் மிகவும் அவசியமாகும் என்றும் கூறினார்.
——————
Reported by : Sisil.L