பீரங்கிக் குண்டுகள் முழங்க இராணுவமரியாதையுடன் பிபின்ராவத் – மனைவியின் பூதவுடல்கள் தீயுடன் சங்கமம்

குன்னூர் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி மற்றும் அவரது மனைவி மதுலிகா ஆகியோரின் பூதவுடல்கள் டெல்லி கண்டோன்மென்ட் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. பின் அவர்களது பூதவுடல்களுக்கு மலர் வளையம் வைத்து அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.


இங்கிலாந்து, பிரான்ஸ் தூதுவர்கள், இலங்கை, பூட்டான், நேபாளம், பங்களாதேஷ் இராணுவத் தளபதிகள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

 
இறுதி அஞ்சலி நிகழ்வில் பிபின் ராவத்தின் இரு மகள்கள், குடும்பத்தினர், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்,  உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங்,  இராணுவ அதிகாரிகள் உள்ளிடோர்  பங்கேற்றனர். இறுதி அஞ்சலியில் இசை அஞ்சலி,  மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

 
அதனைத் தொடர்ந்து பிபின் ராவத், மதுலிகா ராவத்தின் உடலுக்கு அவரது மகள்கள் இறுதிச் சடங்குகளை தங்களது பெற்றோருக்கு கண்ணீர் மல்க செய்தனர்.


பின்னர் கன்டோன்மென்ட் மயானத்தில் பிபின் ராவத் மற்றும்  மனைவி மதுலிகா ராவத் பூதவுடல்கள் தகன மேடைக்கு கொண்டு வரப்பட்டன. பிபின் ராவத் மீது போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடியை அகற்றி அவரது மகளிடம் முறைப்படி இராணுவத்தினர் ஒப்படைத்தனர்.


பின்னர்  தகன மேடையில் பிபின் ராவத் உடலுக்கு மற்றும் தாய் மதுலிகாவுக்கும் அவரது மகள்கள் இறுதி சடங்குகளைச் செய்தனர். தொடர்ந்து ஒரே தகன மேடையில் பிபின் ராவத், அவரது மனைவி உடல்கள் வைக்கப்பட்டன. அதன் பின்னர் பிபின் ராவத், அவரது மனைவி உடலுக்கு மகள்கள்  தீ மூட்டினர். அப்போது  முழு இராணுவ மரியாதையுடன் 17 சுற்று பீரங்கிக் குண்டுகள் முழங்க 800 வீரர்களின் மரியாதையுடன் பிபின் ராவத் உடல் தகனம் செய்யப்பட்டது.


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *