நியூஸிலாந்துப் பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது திடீர் குறுக்கீடு; யாரால்?

நியூசிலாந்து  பிரதமராக ஜெசிந்தா ஆர்டர்ன்  நேற்று முன்தினம், கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிரான போர் குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதை ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளம் நேரலையில் காட்டியது. பிரதமர் ஜெசிந்தா உரையாற்றிக்கொண்டிருந்தபோது திடீரென ஒரு குறுக்கீடு வந்தது. அந்தக் குறுக்கீடு, எதிர்க்கட்சியினரிடம் இருந்தோ, கோபம் கொண்ட ஒரு குடிமகனிடம் இருந்தோ அல்ல. பிரதமரின் 3 வயது மகள் நெவ்விடம் இருந்துதான்.


பிரதமர் ஜெசிந்தா உரையாற்றிக் கொண்டிருந்த போது, அவரது மகள் நெவ், ‘மம்மி’ என அழைத்தவாறு அங்கே வந்து விட்டாள். அதைக் கண்டு அதிர்ந்து போனார், பிரதமர் ஜெசிந்தா. இருந்தாலும், “நீ படுக்கையில் அல்லவா இருக்க வேண்டும், டார்லிங்” எனக் கூறி சமாளித்தார். தொடர்ந்து, “நீ படுக்கையில் இருக்க வேண்டும் டார்லிங். ஒரு வினாடியில் நான் வந்துவிடுகிறேன்” எனக் கூறினார்.


தொடர்ந்து அவர் கமராவைப் பார்த்து, “தூங்கும் நேரம் தவறி விட்டது இல்லையா?” எனச் சிரித்து நாட்டு மக்களைச் சமாளித்தார்.
இதுபற்றிய செய்தி அறிந்த அனைவரும், நாட்டுக்கே பிரதமரானாலும், தன் குழந்தைக்கு அவர் தாய் அல்லவா என சிலாகித்துப் போயினர்.


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *