கனடாவின் ஒஷாவா பகுதியைச் சேர்ந்த 70 வயது நபரை 25 ஆண்டுகளுக்கு முந்தைய துஷ்பிரயோக வழக்கில் ரொறன்ரோ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவலில், தற்போது 70 வயதாகும் அரசகுமார் சவரிமுத்து என்பவர் 1994 முதல் 1996 வரையான காலகட்டத்தில் சிறார் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
9 முதல் 14 வயதுடைய சிறார்களை இவர் துஷ்பிரயோகம் செய்துள்ளமை ஆதாரங்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமக்கு நெருக்கமான மற்றும் நன்கு அறிமுகமான சிறார்களையே இவர் சீரழித்துள்ளதும், ஸ்கார்பரோ பகுதியில் பல இளம் பெண்களை இவர் துஷ்பிரயோகத்துக்கு இலக்காக்கியதாகவும் பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஒக்டோபர் 28ஆம் திகதி, அரசகுமார் சவரிமுத்து மீது உத்தியோகபூர்வமாக 13 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நபரால் பலர் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாகவும், அவர்களும் பொலிஸ் அதிகாரிகளை அணுகி நடந்தவற்றை முறைப்பாடாக தெரிவிக்க வேண்டும் எனவும் விசாரணை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
—————–
Reported by : Sisil.L