நேற்று நள்ளிரவு முதல் கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு

இலங்கையில் இதுவரை இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நடைமுறையில் இருந்த இரவு நேரப் பயணக் கட்டுப்பாடு நேற்று நள்ளிரவு முதல் நீக்கப்படுகிறது.


அத்துடன், திருமண நிகழ்வுகளில் பங்கேற்பாளர்கள் தொகை மற்றும் உணவகங்களில் அனுமதிக்கப்படக் கூடியவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு புதிய சுகாதார வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது.
உணவகங்களில் அவற்றின் கொள்ளளவு திறன் வரப்பில் மூன்றில் ஒரு பங்கு வரை வாடிக்கையாளர்களை அனுமதிக்க முடியும். எனினும் அனுமதிக்கப் படுவோரின் எண்ணிக்கை 75 பேருக்கு மேற்படாதிருத்தால் வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், வெளிப்புற ஒன்றுகூடல்களில் 100 பேர் வரை ஒன்றுகூட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


திருமண நிகழ்வுகளில் நிகழ்வு மண்டபத்தின் கொள்ளவு திறனில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேற்படாதவாறு 100 பேர் வரை பங்கேற்க முடியும். வெளிப்புற திருமண ஒன்றுகூடல்களில் 150 பேர் வரை பங்கேற்கலாம். எனினும் இங்கு மதுப் பரிமாற்றம் தொடர்ந்தும் தடை செய்யப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


உத்தியோகபூா்வ கூட்டங்களில் 150 பேர் வரை பங்கேற்கலாம். எனினும் கூட்டம் இடம்பெறும் மண்டபத்தின் கொள்ளளவு திறனில் மூன்றில் ஒரு பகுதியி னருக்கு மேல் பங்கேற்க முடியாது எனவும் புதிய சுகாதார வழிகாட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தப் புதிய சுகாதார வழிகாட்டல்கள் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன அறிவித்துள்ளார்.

————-                                            Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *