புதிதாக 4,000 பேருக்கு தொழில் வாய்ப்பளிக்கவுள்ள கனடிய அஞ்சல் துறை

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை கருத்தில்கொண்டு 4,000 தற்காலிக ஊழியர்களை பணியில் அமர்த்த கனடிய அஞ்சல் துறை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இது தொடர்பாக கனடிய அஞ்சல் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவிக்கையில், மொத்தம் 4,200 ஊழியர்களை பணிக்கமர்த்த முடிவெடுத்துள்ளதை அடுத்து, 1,400 வாகனங்கள் மற்றும் 2,000 வாகன நிறுத்துமிடங்களும் உருவாக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.


கடந்த ஆண்டு மட்டும், கிறிஸ்மஸ் பண்டிகையின் முந்தைய இரண்டு வார காலத்தில் மொத்தம் 20 மில்லியன் பொதிகளை கனடா மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளதாக கனடிய அஞ்சல் துறை குறிப்பிட்டுள்ளது.


இதில் டிசம்பர் 21ஆம் திகதி மட்டும் 2.4 மில்லியன் பொதிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, கனடா அஞ்சல் பங்குதாரராக உள்ள Purolator Inc என்ற கப்பல் நிறுவனமும் பண்டிகைக் காலத்தை கருத்தில் கொண்டு பல ஆயிரம் புதிய ஊழியர்களை பணிக்கு அமர்த்த முடிவெடுத்துள்ளதாக வியாழக்கிழமை அறிவித்துள்ளது.


தங்களது ஊழியர்கள் இந்த முறை நவம்பர் தொடக்கம் டிசம்பர் இறுதி வரையில் சுமார் 54 மில்லியன் பொதிகளைக் கையாள வேண்டியிருக்கும் என Purolator நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் தற்போது இணையத்தினூடே பொருட்களை வாங்க ஆர்வம் காட்டுவதாலையே இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கனடிய அஞ்சல் துறை குறிப்பிட்டுள்ளது.


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *