வடக்கில் 680 பாடசாலைகளை விரைவில் ஆரம்பிக்கப்படும்: வட மாகாண ஆளுநர்

வடக்கு மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு உட்பட்ட 680 பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான விரைவான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று வடமாகாண ஆளுநர் திருமதி பி. எஸ். எம். சாள்ஸ் தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தில் வெளி மாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தனியான பேருந்து சேவையை வழங்கவும் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று மெய்நிகர் வழியில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே வடக்கு ஆளுநர் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார். மேலும், “கல்வி அமைச்சுக்கும் மாகாண ஆளுநர்களுக்கும் இடையே இடம்பெற்ற கூட்டத்தில் 200 மாணவர்களுக்கு உட்பட்ட தரம் ஒன்று தொடக்கம் தரம் 5 வரையான ஆரம்பப் பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டது.

இதனடிப்படையில் வடக்கு மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு உட்பட்ட 680 பாடசாலைகள் உள்ளன. அவற்றை உடனடியாக ஆரம்பிப்பதற்கான நடவ டிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மாகாணத்தில் வெளி மாவட்டங்களிலிருந்து பயணிக்கும் ஆசிரியர்களுக்கு வசதியாக சிறப்பு பேருந்து சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சரிடம் என்னால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய போக்குவரத்து அமைச்சருடன் பேசி அதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆசிரியர்கள் சுகாதார நடைமுறையின் கீழ் தமது பயணத்தை மேற்கொள்ள முடியும்.

ஆசிரியர்களுக்கு அவசர சுகாதார நடவடிக்கைகளுக்கு பயிற்சியளிக்க மாகாண சபையின் நிதியில் சுகாதாரத் திட்டங்களை முன்னெடுக்க என்னால் உத்தரவிடப் பட்டுள்ளது. மேலும், ஒட்சி மீற்றர் உள்ளிட்ட சுகாதார உபகரணங்களைப் பெற்று ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்க அதிகாரிகளுக்கு பணித்துள்ளேன். அனைத்து ஒழுங்குகளும் முடிவடையும் நிலையில் இருப்பதால் ஆரம்பப் பாடசாலைகள் திடீர் அறிவிப்புடன் ஆரம்பிக்கப்படும் என்றார்

———
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *