மாத்தறை- டிக்வெல்ல பகுதியிலிருந்து மாணவி ஒருவர் தனது தலைவிதியைச் சவாலாக எடுத்துக்கொண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9 A பெறுபேற்றுடன் சித்தியடைந்துள்ளார்.
பிறப்பிலிருந்து நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள காரணத்தால் பெற்றோர்களின் கைகளால் பாடசாலைக் குச் சுமந்து செல்லப்பட்ட தேவி ரன்சரா குலதுங்க ராஜபக்ஷ என்ற மாணவி 2020 ஆண்டுக்கான க.பொ.த சாதாரண பரீட்சையில் 9 A பெறுபேற்றுடன் சித்தியடைந்துள்ளார்.
தரம் ஒன்றிலிருந்து ரத்மலை சதர்ம ராஜ மகா வித்தியாலயத்தில் கற்கும் தேவி ரன்சரா கடந்த 2014 இல் 177 மதிப்பெண்களுடன் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றார்.
குறித்த மாணவி ஏனைய மாணவர்களை விட விஷேட கவனத்துக்குரியவர். ஏனெனில் அவள் பிறப்பிலிருந்து நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள மையே இதற்குக் காரணம்.
தேவி ரன்சரா குலதுங்க ராஜபக்ஷ மாத்தறை பம்பரந்த சதர்ம ராஜ மகா வித்தியாலயத்தில் படிக்கிறார்.அவரது இயலாமை காரணமாக, பாடசாலை வகுப்பறையில் அவளுக்காக விசேட இருக்கை ஒதுக்கப்பட்டது.
அவளது விஷேடதேவைகளைக் கருத்திற்குக் கொண்டு அழகியல் கலைக்குப் பதிலாக பாடசாலையில் சிங்கள இலக்கியத்தைப் படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
ஆனால், தேவி தன் வாழ்வின் எந்த ஒரு நாளிலும் இயலாது என நினைக்கவில்லை.இலக்கை நோக்கிய அசைக்க முடியாத நம்பிக்கை, அர்ப்பணிப்பு மற்றும் முயற்சி அவளுக்கு வாழ்க்கையில் வெற்றியின் மைல்கல்லைக் கடக்கும் வாய்ப்பை வழங்கியது.
தேவி ரன்சராவின் தந்தை மஹிந்த குலதுங்க ராஜபக்ஷ மாத்தறை வன இலாகா அலுவலகத்தில் கள அலுவலராகவும், அவரது தாயார் குசும்னி அபேகுணவர்தன ரத்மலை சதர்ம ராஜ மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகவும் பணி புரிகின்றனர். இரண்டு இளைய சகோதரர்களும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றுள்ளனர்.
பிறப்பிலிருந்து முதுகெலும்புடன் தொடர்புடைய நரம்பியல் நோய் காரணமாகத் தேவி தனது வாழ்நாளின் பெரும் பகுதியை சிகிச்சைக்காக மருத்துவமனைகளிலேயே பெற்றோருடன் கழித்துள்ளார்.
சிகிச்சைக்காக அவள் எவ்வளவு நேரம் செலவிட்டாலும், தேவி தன் கற்றலுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளார்.
————