யாழ்.,கிளிநொச்சி மாவட்டங்களில் நீர்வழங்கல்திட்டங்கள்; பிரதமர் ஆரம்பித்து வைப்பார்

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி (பளை) பகுதிகளில் மூன்று இலட்சம் மக்களுக்கு (60,000 குடும்பங்களுக்கு) சுத்தமான குடிதண்ணீரை பெற்றுக் கொடுக்கும் இரண்டு பாரிய நீர் வழங்கல் திட்டங்கள் தொடக்கி வைக்கப்பட உள்ளன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  தலைமையில், ஒக்ரோபர் மாதம் 6ஆம் திகதி, மெய்நிகர் தொழில்நுட்பம் ஊடாக இந்தத் தொடக்க நிகழ்வு இடம்பெறவுள்ளது என்று அரசாங்கத்தின் வடக்கு கிழக்கு புனர்வாழ்வு, புனர்நிர்மாண மற்றும் வீடமைப்பு ஒருங்கிணைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்தார்.

 தாளையடியில் நிர்மாணிக்கப்படும் SWRO கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் வேலைத்திட்டம் தொடக்கி வைக்கப்பட உள்ளதுடன், நயினாதீவில் முழுமையாக நிறைவு செய்யப்பட்ட நீர் விநியோகத் திட்டம் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. நயினாதீவு திட்டத்தின் மூலம் 5000 பயனாளர்களுக்கு சுத்தமான நீர் வழங்கப்படவுள்ளது. 

இதேவேளை, தாளையடியில் நிர்மாணிக்கப்படும் SWRO கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத் திட்டத்தின் நீட்சியாக – ஒரு இலட்சம் மக்களை உள்ளடக்கிய வகையில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றும் சுகாதார திட்டத்தின் கீழ் 284 கிலோமீற்றர் தூரத்திற்கு குழாய்களை அமைக்கும் திட்டம் உள்ளடக்கிய யாழ். மாநகர விநியோக திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது. 

யாழ். மாநகர விநியோகம் மற்றும் தாளையடி SWRO திட்டங்கள் 2023ஆம் ஆண்டு நிறைவு செய்யப்படுவதுடன், இதனூடாக மூன்று இலட்சம் பயனாளர்களுக்கு சுத்தமான குடிநீர் பெற்றுக் கொடுக்க எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் கீதநாத் காசிலிங்கம் மேலும் தெரிவித்தார்.
———-
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *