அமெரிக்காவில் 23 ஆயிரம் ஆண்டு பழைமையான மனிதனின் கால் தடம் கண்டுபிடிப்பு

அமெரிக்காவில் 23 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதனின் கால் தடத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.


அமெரிக்காவின் வடக்குப் பகுதியிலுள்ள நியூ மெக்சிகோ மாகாணத்தில் தொல்பொருள் ஆராய்ச்சி ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். அப்போது மிகவும் பழைமையான மனித கால் தடத்தை அவர்கள் கண்டுபிடித்தனர்.


இது குறித்து விஞ்ஞானிகள் கூறும்போது, நியூமெக்சிகோ மாகாணத்தில் புதை படிவ காலடித் தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் காலடித் தடங்களும் கண்டறியப்பட்டன.


இந்தக் காலடித் தடங்கள் சுமார் 23 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆதி மனிதர்கள் நடமாடுவதை சுற்றிக் காட்டுகின்றன. கடந்த 2009ஆம் ஆண்டு முதல் முறையாக வெள்ளை மணல் தேசிய பூங்காவில் உள்ள ஒரு வறண்ட ஏரி படுக்கையில் இம்மாதிரியான காலடித் தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.


இதன் மூலம் இடம்பெயர்வு குறித்து நீண்ட காலமாக நிலவும் மர்மத்தை விளக்க உதவும். ஆபிரிக்கா மற்றும் ஆசியாவிலிருந்து இடம் பெயர்ந்த மக்கள் எப்போது அமெரிக்காவுக்கு வந்தனர் என்பதையும் கண்டுபிடிக்க உதவும்.


ஆசியாவை அலாஸ்காவுடன் இணைத்த நிலப்பாலம் வழியாக முந்தைய மனித இடப்பெயர்வுகள் இருந்ததாக நம்பப்படுகிறது. 16 ஆயிரம் முதல் 26 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் மனிதக் குடியேற்றங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதை படிவ காலடித் தடங்கள் இதை உறுதி செய்கின்றன. இந்தப் புதை படிவ காலடித் தடங்களைப் பாதுகாப்பதற்கு ஒரே வழி அதனை புகைப்படங்களாக எடுத்துக் கொள்வது மற்றும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அதனைத் தெளிவாக்குவது ஆகும் என  அவர்கள் கூறினார்கள்.
——————

Reported by : Sisil.L



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *