தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முழு வீச்சில் இடம்பெறுவதால் நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் நாடு வழமைக்குத் திரும்பி விடும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.நாட்டில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் மிகச்சிறப்பாக இடம்பெறுகின்றன. 50 வீதமானவர்களுக்கு தடுப்பூசியை செலுத்தியுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இது மிகச்சிறந்த சாதனை என அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் வழமைக்குத் திரும்ப வேண்டும் என்றால் தற்போதைய வேகத்தை தொடர வேண்டும். தற்போது நோயாளர்களினதும் உயிரிழப்பவர்களினதும் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களை அடுத்த சில வாரங்களுக்கு பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ள அமைச்சர் இதன் மூலம் நவம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
————–
Reported by : Sisil.L