பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான ஆதரவை வழங்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் செனல் பெர்னாண்டோ இது தொடர்பில் தெரிவிக்கையில், சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவதன் மூலம் பாடசாலைகளை உடனடியாக மீண்டும் திறக்க வழிவகை செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுப் பரவலால் சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாடசாலை மீண்டும் திறக்க உதவும் பொறுப்பு சுகாதாரத் துறையின் ஒரு பகுதியாகவுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்துக்கு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமானது பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்குத் தேவையான ஆதரவை வழங்குவதாகவும் அவர்களின் பரிந்துரைகளை அரசாங்கம் செயற்படுத்தும் என நம்புகிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.
பாடசாலைகளை மீண்டும் திறக்க சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவது மிகவும் அவசியம். எனவே இந்தச் செயல்முறை உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றார்.
சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான தொழில்நுட்ப அறிக்கை ஜனாதிபதி, சுகாதார, கல்வி அமைச்சர்கள் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சிறுவர்களிடையே தொற்று நோய்களைத் தடுப்பது, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது, கொவிட்-19 இன் தீவிர நிகழ்வுகளைக் குறைப்பது மற்றும் கொரோனா தொற்றுகளால் ஏற்படும் சிறுவர் இறப்புகளை தவிர்ப்பதற்கான பரிந்துரைகளை வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
————————
Reported by : Sisil.L