கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒன்ராறியோவில் தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றவிருந்த நிலையில், அந்த நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டது.
நேற்று மாலை, ஒன்ராறியோவிலுள்ள Bolton என்ற இடத்தில், ட்ரூடோ தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றுவதாக இருந்தது. ஆனால், அவரது ஆதரவாளர்களை விட எதிர்ப்பாளர்கள் அங்கு அதிகளவில் கூடினார்கள். அத்துடன், கடுங்கோபத்திலிருந்த அவர்கள் ஆபாசமான வார்த்தைகளால் ட்ரூடோவை விமர்சித்தார்கள். ஆபாச வார்த்தைகள் அடங்கிய பதாகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தார்கள்.
இரண்டரை மணி நேரமாகியும் அவர்கள் கலைந்து செல்வதற்கான அறிகுறி எதுவும் தென்படாததால், ட்ரூடோ கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அவரது ஆதரவாளர்களில் ஒருவர் அறிவித்தார். அப்போதும் எதிர்ப்பாளர்கள் பலத்த குரல் எழுப்பினார்கள்.
பாதுகாப்பு கருதி ட்ரூடோவின் கூட்டம் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையிலும், பொலிஸார் வந்து ட்ரூடோ கூட்டத்துக்காக கூடியிருந்தவர்களை அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச் செல்ல நேரிட்டது.
Reported by : Sisil.L