கனடிய தேர்தல்: 5 கட்சித் தலைவர்கள் நேரடி விவாதத்தில் ஈடுபடவுள்ளனர்

கனடாவில் பாராளுமன்றத் தோ்தல் செப்டம்பர் 20-ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் தோ்தலுக்கு முன்னரான நேரடி விவாதங்களில் கட்சித் தலைவர்கள் ஈடுபடவுள்ளனர்.


அதன்படி பிரெஞ்சு மொழி விவாதம் செப்டம்பர் 8ஆம் திகதி இரவு 8 முதல் 10 மணி வரை இடம்பெறவுள்ளது. ஆங்கில மொழி விவாதம் செப்டம்பர் 9 இரவு 9 மணி முதல் 11 மணிவரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


சில அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டு விவாதத்தில் பங்கேற்கும் முன்னணி அரசியல் கட்சிகள் தோ்வு செய்யப்படும். இறுதியாக இடம்பெற்ற பொதுத் தோ்தலில் குறைந்தபட்சம் 4 வீத வாக்குகளைப் பெற்ற கட்சிகளே விவாதத்தில் பங்கேற்க தகுதி பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், அக்கட்சிகள் குறைந்தபட்சம் ஒரு பாராளுமன்ற உறுப்புரிமையாவது கொண்டிருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டு விவாதத்தில் பங்கேற்கும் கட்சித் தலைவர்களை விவாத ஆணையம் தீா்மானிக்கும்.


இந்த அளவுகோல்களை பூா்த்தி செய்யாததால் கனடாவின் மக்கள் கட்சித் தலைவர் மாக்சிம் பெர்னியர் இம்முறை பொதுத் தோ்தலுக்கு முன்னரான பகிரங்க விவாதத்தில் பங்கேற்க மாட்டார் என விவாத ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் லிபரல், கன்சர்வேடிவ், என்.டி.பி., பிளாக் கியூபெகோயிஸ் மற்றும் பசுமைக் கட்சி ஆகிய 5 கட்சிகளின் தலைவர்கள் இம்முறை பகிரங்க விவாதத்தில் பங்கேற்கவுள்ளனர்.


அத்துடன் விவாதத்தில் பங்கேற்பதற்கான அழைப்புக் கடிதங்கள் இந்தக் கட்சிகளின் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் இதுவரை என்.டி.பி. மற்றும் பசுமைக் கட்சி ஆகியன விவாதத்தில் பங்கேற்க ஒப்புதல் தெரிவித்து கடிதங்களை அனுப்பியுள்ளதாக ஆணையத்தின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை இந்த விவாதங்கள் முக்கிய கனேடிய ஊடகங்களில் நேரலையான ஒளி,ஒலிபரப்பு செய்யப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
——————————-

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *